கொடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு ஏன் பயப்படணும்.? உண்மையான குற்றவாளிகள் தெரியணும்.. சரத்குமார் சரவெடி.!

By Asianet TamilFirst Published Sep 9, 2021, 9:23 PM IST
Highlights

கொடநாடு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படும் என்பதற்கு ஏன் பயப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

திண்டுக்கல்லில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு பதவியேற்று 6 மாதங்கள் ஆன பிறகுதான் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்ல முடியும். கடந்த ஆட்சி செயல்பட்டதைவிட என்னென்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என புதிய அரசு நினைக்கிறதோ அவற்றைச் செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவை. அதன் பிறகே திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்ல முடியும்.
தமிழக முதல்வர் அளித்த தேவையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை. அதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. கொடநாடு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்படும் என்பதற்கு ஏன் பயப்பட வேண்டும். நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்கு இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு பற்றிய விசாரணை பற்றி தமிழக முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலைக் கட்சிக்கு அப்பாற்பட்டதாகவே பார்க்கிறேன். நேரடியாக மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள்தான் போட்டியிடுவார்கள். கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவு செய்வோம்” என்று சரத்குமார் தெரிவித்தார்.
 

click me!