புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு.. எம்.பி. பதவி யாருக்கு.? எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா..?

By Asianet TamilFirst Published Sep 9, 2021, 9:51 PM IST
Highlights

புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அங்கிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

புதுச்சேரியில் ஒரே ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி உள்ளது. புதுச்சேரியிலிருந்து எம்.பி.யாக அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் இருக்கிறார். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து எம்.பி.யாக இருக்கும் அவருடைய பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. இந்தக் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அக்டோபர் 6 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யார் எம்.பி. பதவிக்கு நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். பாஜக,  திமுகவைச் சேர்ந்தவர்கள் தலா 6 பேர், 2 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 6 பேர் சுயேட்சைகள். இதில் 3 சுயேட்சைகள் பாஜகவை ஆதரிக்கிறார்கள். எனவே, 9 பேர் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. இந்தப் பதவியைப் பிடிக்க என்.ஆர். காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுமே காய் நகர்த்தி வருகின்றன.
கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் சார்பில் கோகுலகிருஷ்ணனைத் தேர்வு செய்ய ரங்காசாமி விரும்பினார். ஆனால், அவரை எம்.பி.யாக்க அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை. இதனையடுத்து அதிமுகவில் கோகுலகிருஷ்ணனை இணைத்து, அக்கட்சி உதவியுடன் அவரை ரங்கசாமி எம்.பி.யாக்கினார். இந்நிலையில் இந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவை நிறுத்த ரங்கசாமி விரும்புகிறார். ஆனால், மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் அந்தப் பதவியைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் தமிழகத்திலிருந்து தகவல் தொழில்நுட்பம், கால்நடை, மீன்வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சரான எல்.முருகன் எம்.பி.யாக இல்லை. அமைச்சராகப் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஒரு அவையில் அவர் எம்.பி.யாக வேண்டும். எனவே, எல்.முருகன் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் எம்.பி.யாவார் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த விஷயத்தில் விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது.

click me!