
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மணிவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் ஆகியோர் கலந்துகொண்டு மணிவிழா தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவுக்கு 60 வயதை எட்டியதை அடுத்து அவருக்கு நேற்று சஷ்டியப்தபூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்த மணிவிழா நடைபெற்றது.
இந்த விழாவில், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றபோதிலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டது சற்று வியப்பளிக்கக்கூடிய விஷயம்தான்.
இந்தி திணிப்பு, நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசு தமிழகத்தில் புகுத்திவிட துடிக்கிறது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாஜக அரசை ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். கொள்கை ரீதியான ஸ்டாலினின் எதிர்ப்புகளை கொள்கை ரீதியாக மட்டும் எதிர்க்காமல் தனிப்பட்ட விதத்திலும் ஸ்டாலினை கடுமையாக சாடியிருக்கிறார் எச்.ராஜா.
அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பாஜகவிற்கும் திமுகவிற்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, தனது மணிவிழாவிற்கு ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் எச்.ராஜா. ராஜாவும் ஸ்டாலினும் அரசியக் ரீதியாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டாலும் அரசியலைக் கடந்து எச்.ராஜாவின் அழைப்பை ஏற்று அவரது மணிவிழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டது அரசியல் நாகரீகத்தைக் காட்டுகிறது.
மத்திய பாஜக அரசிற்கு எதிரான கருத்துகளோ போராட்டங்களோ எழுந்தால், அந்த குறிப்பிட்ட விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டையும் மத்திய அரசின் நோக்கத்தையும் விளக்குவதில் தமிழக பாஜக தலைவரை விட முன்னணியில் இருப்பவர் எச்.ராஜா. தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி எதிர்த்தரப்பினரின் எதிர்ப்புகளை முடிந்தவரை தவிடுபொடியாக்கி விடுவார் எச்.ராஜா. உச்சகட்ட சர்ச்சைக்குரிய வகையில் எச்.ராஜா பேசினாலும் அதுதொடர்பான எந்த எதிர்வினையையும் அவர் சந்திக்காத அளவிற்கு அவரை பார்த்துக்கொள்கிறது டெல்லி தலைமை.
ஏனென்றால் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் தமிழகத்தில் தூக்கி நிறுத்துவதில் முக்கியப் பங்கு எச்.ராஜாவுடையது.
தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சியை யாரும் பொருட்படுத்தாமல் இருந்தநிலை மாறி, எதிர்க்கட்சிகள் கூட மாநில அரசை விமர்சிக்காமல் மத்திய பாஜக அரசை விமர்சிக்கக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இதுவே பாஜகவிற்கு பாதி வெற்றிதான்.
10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மத்தியில் ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான பாஜக, அனைத்து மாநிலங்களையும் கவரும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டது. மத்தியில் மட்டும் ஆட்சியில் இருப்பது நினைத்ததை சாதிக்க பயனாக இருக்காது என்பதால் மாநிலங்களையும் கைப்பற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அப்படியான வியூகங்களின் விளைவாகத்தான் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியையும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் அரசுடன் கூட்டணியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் தலைமையிலான பாஜகவிற்கு காலூன்றுவதற்கு சவாலாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் தற்போது தமிழகத்திலும் பாஜக கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக மீதான எதிர்ப்புகளை சமாளிப்பதில் முக்கியமானவர் எச்.ராஜா.
என்னதான் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் எச்.ராஜாவை கிழித்தெறிந்த சில தலைவர்கள் கூட அவரது மணிவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தியது அரசியல் நாகரீகம் தமிழகத்தில் வளர்ந்துவிட்டதையே காட்டுகிறது.