
கமலின் சினிமாவுக்கும், அவரது அரசியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டையும் ஒரே ஆளுமையுடன் தான் கையாள்கிறார் என்றே தெளிவாகிறது.
எப்படி? என்கிறீர்களா...
ஒரே படத்தில் ஒன்று முதல் பத்து அவதாரங்களாகி வெவ்வேறு பரிமாணங்களில் தகர்த்தெறிவார். அதே வீச்சுடன் தான் அரசியலுக்கான முன் தயாரிப்பு முயற்சியிலும் வீரியம் காட்டிட துவங்கிவிட்டார். ஒரே பேட்டியில் 3 ஆளுமைகள் மீது பொளேர் விமர்சனங்களையும், கருத்துக்களையும் வைத்து டாக் ஆஃப் தி டவுன் ஆகியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மரண பின்னணி பெரும் பஞ்சாயத்தாக உருவெடுத்திருக்கும் நிலையில் அதை பற்றி பேசியவர் ‘’ ஒரு முதல்வர் என்றில்லாமல் சாதாரண பெண்மணி என்கிற அளவில் நோக்கினாலும் கூட அவரது மரணத்தின் பின்னணியில் மர்மம் இருப்பதை கவனித்தாக வேண்டும். இதை தீர விசாரிக்க வேண்டியது அவசியம். ஆனால் அ.தி.மு.க.வை மக்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள்.’’ என்று முடித்துக் கட்டியவர் அடுத்து ரஜினியை தொட்டார்...
“நான் ரஜினியை சந்தித்து, அரசியலுக்கு வரப்போகும் முடிவெடுத்திருப்பதை கூறினேன். உடனே எப்போது இந்த முடிவெடுத்தீர்கள்? என்று கேட்டார், நான் அதை எப்போதோ எடுத்துவிட்டதாக கூறினேன்.” என்று அரசியல் எண்ட்ரியில் ரஜினியை விட தான் முன்னோடி என்பதை அவரிடமே நேருக்கு நேராக நிரூபித்திருக்கிறார்.
அடுத்து விஜய்யை கையிலெடுத்தவர், “ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருக்காதா என்று கேட்கிறார்கள். அப்படி இடையூறாக இருந்தால் அதற்கு தகுந்த விமர்சனம் வைக்கப்படும்.” என்று ஜஸ்ட் லைக் தட் ஆக காலி செய்தவர்,
“ என்னை யாரோ இயக்குவதாக சொல்கிறார்கள்...என்னை யாரும் இயக்க முடியாது.” என்று பிக்பாஸ் ஹேர்ஸ்டைலை கோதி சிரித்திருக்கிறார்.
பிக் பாஸ்! பிக் மாஸ் ஆகிக் கொண்டிருக்கிறார்...