
அரசு மீது குற்றஞ்சாட்டி வரும் அதிமுக இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், 22ஆம் தேதி மாலை அவர்களுக்கே உண்மை தெரிந்துவிடும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இறுதி நாளாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் உள்ள 139, 140, 142 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் தற்போது உருவாகியுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள நலத் திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது, முதல்வர் மீது மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதால் வெற்றி நிச்சயக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்றார். மேலும், மக்களின் மனங்களை வென்ற இயக்கமாக திமுக உள்ளது மக்களின் மனதில் நிரந்தர இடத்தை முதல்வர் பெற்றிருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை பொறுத்தவரை பணம் ஒன்றை நம்பியே தேர்தலில் களம் காண்பவர்கள் மக்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். அந்த வகையில்தான் வேளச்சேரியில் ஒட்டுக்கு 1000 ரூபாய் என்று தொடங்கி 5000 ரூபாய் வரை கொடுத்து சிறையில் இருக்கிறார்கள். அந்த வகையில் தான் சேலத்தில் கூட எடப்பாடி நண்பர் வீட்டில் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்று நடைபெற்று வருகிறது என்றார். மேலும், விதி மீறல்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிமுகவினர்தான் அவர்களே தவறு செய்துவிட்டு இன்னொருவர் மீது குற்றம் சாட்டி வருவதாக கூறிய அவர், ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் யாரும் விமர்சனம் செய்யவில்லை என தெரிவித்தார்.
அரசு மீது குற்றம் தெரிவித்த வரும் அதிமுக இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், என்ன வேண்டுமானாலும் பேசட்டும் 22ஆம் தேதி மாலை அவர்களுக்கே உண்மை தெரிந்துவிடும் என்றார். மேலும், அதிமுகவில் இருந்த தொண்டர்கள் விலகி திமுகவில் இணைந்த வருகிறார்கள், அங்கு இருப்பவர்கள் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆசை வார்த்தை காட்டி வருகிறார்கள். பொங்கல் பரிசில் ஊழல் என்று எப்படி எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார் அதை எங்காவது நிரூபித்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.