
திமுக வலுவான கூட்டணி அமைத்து ஓரணியில் நின்றாலும் ஆர்.கே.நகர் மட்டுமல்ல, இன்னும் ஆயிரம் தேர்தல்கள் நடந்தாலும் அனைத்திலும் அதிமுகவே வெற்றிபெற முடியும் என்று கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.
தமிகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பேனர் விவகாரம், ஒகி புயலால் மீனவர்கள் மாயம், அலங்கார வளைவில் மோதி இளைஞர் மரணம் என பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே நேற்று கோவை வ.உ.சி பூங்காவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவில் ரூ.691 கோடி மதிப்பீட்டில் கோவையில் நிறைவடைந்துள்ள திட்டப் பணிகளை எடப்பாடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான தீர்ப்பால் உண்மையான அதிமுக விசுவாசிகளுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்..
அதிமுகவினர் அனைவரும் ஓரணியில் நின்று எதிர்கொண்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல என்ன? இன்னும் ஆயிரம் தேர்தல்களில் அதிமுக வெற்றியடைய முடியும் என எடப்பாடி தெரிவித்தார்.
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு பாதிப்பு பகுதிகளை சரி செய்வதற்காக உடனடியாக வருவாய்த்துறை அமைச்சரை அனுப்பினோம், மின்துறை அமைச்சர் தங்கமணியையும் அனுப்பி வைத்துள்ளோம். அவர்களின் மேற்பார்வையில் மின்சார சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இப்பணிகள் முழுமையாக சீரடைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
மீனவர்களை மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறான தகவல். கடலுக்குச் சென்ற அனைத்து மீனவர்களையும் கட்டாயமாக மீட்போம். மீனவ மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.