இரட்டை இலை சின்னத்தில் போட்டி என ஒபிஸ் பேசுவது ஜோக்காக உள்ளதாகவும் விரக்தியின் விளிம்பில் இது போன்று பேசுவதாகவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள் எனவும் கூறினார்.
மக்களுடன் தேர்தல் கூட்டணி
சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் ஹாலில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் அச்சமின்றி இருந்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் உள்பட அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அராஜக வழியில் செல்பவர்களை விட அமைதி வழியில் செல்பவர்களுக்குதான் வெற்றி கிடைக்கும். இது நான் பேசுவது நபிகள் நாயகம் பற்றித்தான், தமிழ்நாட்டு அரசியல் பற்றி இல்லை. நாங்கள் பலமான கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ் மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என கூறினார்.
விரக்தியில் ஓபிஎஸ்
இஸ்லாமியர்களின் நலனுக்கு எல்லாம் செய்தது எல்லாம் அம்மா. திமுக செய்ததாக சொல்வதெல்லாம் சும்மா. முதல்வர் ஸ்டாலின் அதிமுக பாஜவுடன் கள்ள உறவில் உள்ளதாக சொல்லி இருக்கிறார். அதிமுக எப்போதும் நேர்பாதையில் தான் செல்லும். எதிர் கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு Goback modi என்று சொல்லும் திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமரை அழைத்து welcome modi என்று சொல்வது திமுக தான் என விமர்சித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவது குறித்து கேள்விக்கு, ஓபிஎஸ் பேசுவது ஜோக்காக உள்ளது என்றும் விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு அவர் பேசுவதாகவும் தாங்கள் சட்டரீதியாக அனைத்தையும் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
பாமகவுடன் பேசவில்லை
மேலும் எது சரி எது தவறு என்பதை நீதிமன்றம் அளிக்கும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் முழுமையான கருத்து தெரிவிக்க முடியாது எனவும் நாளை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறினார். பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிலை குறித்த கேள்விக்கு, பாஜகவுடன் பாமக கூட்டணிக்கு செல்வதாக கற்பனையில் ஊடங்களில் செய்தி வெளியாகிறது என்றும், இதுவரை அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை பேச்சுவார்த்தை நடத்தும் போது தெரிவிப்போம் என கூறினார்.
அதே நேரத்தில் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். பாஜக தலைமையிலான மூன்றாவது அணியால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுத்துள்ளது அதே நேரத்தில் திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. அதிமுக முழுமையான கூட்டணி அமைத்த பிறகு எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என தெரிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்