திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கரும்பு ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்பொழுது 195 ரூபாய் மட்டும் உயர்த்தி இருப்பது விவசாயிகளை வஞ்சிக்க கூடிய ஏமாற்றும் செயல் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை பட்ஜெட்
தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் வாசிக்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு எந்த நலனையும் பயக்கக்கூடிய பட்ஜெட் ஆக இல்லையென குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கரும்பு ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்பொழுது 195 ரூபாய் மட்டும் உயர்த்தி இருப்பது விவசாயிகளை வஞ்சிக்க கூடிய ஏமாற்றும் செயல் என தெரிவித்தார். நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வருவதற்கு முன்பாக திமுகவினர் வாக்குறுதிகள் அளித்தார்கள். ஆனால் இன்றைக்கு வேளாண் துறை சார்பில் வெளியிட்ட மூன்றாவது பட்ஜெட்டிலும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என விமர்சித்தார்.
இயற்கை சீற்றத்தால் பாதிப்பு
மழையானாலும் சரி வறட்சியானாலும் சரி விவசாயிகளுடைய நன்மை அக்கறை கொண்டு செயல்படக்கூடிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டதாகவும் கூறினார். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது உரிய இழப்பீடு வழங்கப்படவில்லையெனவும் குற்றச்சாட்டினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் முளைத்து சேதமான நிலையில், எந்த இழப்பீடும் முழுமையாக பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பதாக தெரிவித்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாப்பதற்கும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென தெரிவித்தவர், இதனால் பல லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி இருப்பதாக தெரிவித்தார்.
பொங்கலுக்கு கரும்பு
இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய செயல் என குற்றச்சாட்டினார். இரவு பகல் பாராமல் பல மாதங்கள் உழைத்து அறுவடை செய்து நெல்மணிகளை விவசாயிகள் கண்முன்னே முளைத்து வீணாவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். பொங்கல் தொகுப்பில் விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை வழங்காத நிலையில், அறிக்கை வெளியிட்ட பிறகும், போராட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்ததன் காரணமாகவே பொங்கல் தொகுப்பில் விவசாயிகள் விளைவித்த கரும்பை வழங்கியதாக தெரிவித்தார். காவிரி - குண்டாறு திட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்றைய பட்ஜெட்டில் அதற்கான நிதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை, அறிவிப்பும் வெளியிடப்படவில்லை இது காழ்ப்புணர்ச்சி காரணமான திமுக அரசு செயல்படுவதாக கூறினார்.
விவசாயிகளுக்கு மின்சாரம்
விவசாயிகளுக்கான வேளாண் பட்ஜெட் என்கிற பெயரில் ஒரு மாயத் தோற்றத்தை திமுக அரசு இன்றைக்கு சட்டமன்றத்தில் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தி மு க அரசில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் மின்சாரத்துறை அமைச்சர் மின் தட்டுப்பாடு இல்லை என்கிறார். பிறகு எதற்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு கட்டுப்பாடு நேரம் விதிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்து நேர கட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கியது அம்மாவின் அரசு என்று தெரிவித்தவர், இன்றைக்கு திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகளோடு மின்சாரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள்