பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்கிறது ஒரு தரப்பும், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது தான் நமக்கு சாதகம் என இன்னொரு தரப்பும் தெரிவித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி மோதல்
அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பேற்ற பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தனர். அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக மொத்தமாக 76 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
அண்ணாமலை பேச்சால் சர்ச்சை
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக அதிமுக, பாஜக கூட்டணியில் மோதல் ஏற்பட்டது.
அதிமுக - பாஜக நிர்வாகிகளுக்குள் நடைபெற்ற வார்த்தை போரால் கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது. பாஜக,அதிமுக கூட்டணி முறிந்ததற்கு அதிமுகவில் ஒரு தரப்பு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக,அதிமுகவோடு கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காது என்றும் தோல்வியே பரிசாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவோடு கூட்டணி இன்று முக்கிய முடிவு
அதே நேரத்தில் பாஜகவோடு கூட்டணி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் எனவும், எனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் எனவும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கேபி முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதிமுகவின் இருதரப்பு நிர்வாகிகள் பாஜக உடன் கூட்டணி வைக்கலாம் என்றும், வேண்டாம் எனவும் தெரிவித்து வருவதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது, இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி தொடர்பாக ஆலோசித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்