
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளருமான தீபாவால் பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டேன் என்று சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டை மொத்த வியாபாரம் மற்றும் மளிகைக் கடை நடத்திவருகிறேன். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினேன்.
தீபாவின் கார் டிரைவர் ராஜா என்னை தொடர்புகொண்டு தி.நகர், சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டை ஆல்டரேஷன் செய்ய 50 லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார். முதல் முறையாக 4.3.2017 அன்று சென்னை அடையாற்றில் வைத்து பணத்தைக் கொடுத்தேன்.
மேலும், பல கட்டங்களில் ராஜா மூலம் தீபாவுக்குப் பணம் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த 50 லட்சம் பணத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் திருடிவிட்டுதாகத் தீபாவும் ராஜாவும் என்னிடம் கூறினர். இதனால், அவசரச் செலவுக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதுவரை கட்சி அலுவலகம் திறந்தது, கொடி ஏற்றியது என்ற வகையில் பல லட்சங்களை இழந்துள்ளேன்.
அந்தப்பணத்தை நான் திரும்ப கேட்கவில்லை. ஆனால் தீபா மற்றும் அவரின் கார் டிரைவர் என்னிடம் வாங்கிய பணத்தை கேட்கிறேன். என்னிடமிருந்து இதுவரை மொத்தம் 1.12 கோடி ரூபாய் வரை தீபாவும் ராஜாவும் மோசடி செய்துள்ளனர். எனவே, பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பணத்தைப் பறிகொடுத்ததாக புகார் அளித்த முட்டை வியாபாரி ராமசந்திரன் கூறுகையில், "என்னுடைய தந்தை நயினார் அ.தி.மு.க-வில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தீபாவின் தலைமையில் செயல்பட்டேன். என்னிடம் கடனாக வாங்கிய 1.12 லட்சம் பணத்தை தீபாவிடம் திரும்பக் கேட்டதால் என்னைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
என் மீது தி.நகர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். அவர் கொடுத்தது பொய் புகார் என அந்த தெருவில் இருக்கும் சிசிடிவி கேமரா அம்பலபடுத்தியது. அதுமட்டுமல்ல எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். நானே கடன் வாங்கிதான் தீபாவுக்குப் பணம் கொடுத்தேன். இதுவரை 3 லட்சம் ரூபாய் வட்டி கட்டியிருக்கிறேன். தீபாவிடம் கொடுத்த பணத்துக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது" என்றார்.
ராமசந்திரனிடம் மட்டுமல்ல பலர், தீபாவை நம்பி வந்து பலர் தங்களது பணத்தை லட்சக்கணக்கில் பறிகொடுத்துள்ளார்கள். பதவிகளைக் கொடுப்பதாக அவரது கார் டிரைவர் ராஜா பண மோசடி செய்துள்ளார். முட்டை வியாபாரி ராமசந்திரனிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தீபாவும் ராஜாவும் வாங்கியுள்ளனர். ராமசந்திரன் புகார் தொடர்பாகத் தீபாவின் செல்போனுக்கு பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் போனை துண்டிக்கிறார் என ராமசந்திரனின் வழக்கறிஞரும் தீபா பேரவையின் முன்னாள் மாநிலத் தலைமை செய்தித் தொடர்பாளருமான பசும்பொன்பாண்டியன் கூறியுள்ளார்.