பெற்றோர்கள் கவனத்திற்கு... தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்த அதிரடி எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 28, 2021, 12:51 PM IST
Highlights

தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டாலும் பல்வேறு பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்தும் படி பெற்றோர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அவ்வாறு செலுத்தவில்லை என்றால் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நீக்குவதாகவும்  புகார்கள் எழுந்தன. 

தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கல்விக் கட்டணம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்தது. எனவே  ததனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்தோடு 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீருடை, பேருந்து உட்பட இருந்து இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும், அவ்வாறு புகார்கள் வரும் பட்சத்தில் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவை மீறி பல தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை கட்டாயப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், 100% கட்டாயம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 

click me!