
பெங்களூரு நகரில் 2018ம் ஆண்டு, ஜனவரி 1ந்தேதி பிறக்கும் முதல் குழந்தைக்கு பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மேயர் ஆர். சம்பத் ராஜ் நேற்று கூறியதாவது-
பெண் குழந்தைகள் குடும்பத்துக்கு சுமையாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக 2018ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி பெங்களுரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு பள்ளி முதல், கல்லூரி வரை கல்வி இலவசமாக அளிக்கப்படும்.
மேலும், ‘தி புர்கத் பெங்களூரு மகாநகர பலிகா’ சார்பில் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ. 5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி, அந்த குழந்தையின் கல்விக்கு பயன்படுத்தப்படும்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்து, அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை சுமையாக நினைக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவமனையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு கர்பிணிகளை கண்காணிப்பார்கள். 12 மணிக்கு பின் பிறக்கும் முதல் பெண் குழந்தை யார் என்பது கண்காணிக்கப்படும்.
அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எந்த நேரமும் பிறக்க வைக்கலாம், ஆனால், இயல்பான பிரசவத்தின் மூலமே பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
மாநகராட்சியில் உள்ள 32 சுகாதார மையங்கள், 26 தாய்,சேய் நல மையங்கள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.