
சந்தர்ப்பவாதம் தானே அரசியல்! பசை உள்ள பக்கம் சாய்வது மட்டுமல்ல அதிகாரம் உள்ள பக்கம் சாய்வது மட்டுமல்ல கரீஸ்மா உள்ள பக்கமும் சாய்வதே அரசியல் சாதுர்யம்.
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக நின்று இமாலய வெற்றி பெற்றுள்ளார் தினகரன். கடந்த பொது தேர்தலில் ஜெயலலிதா தனது கூட்டணி கட்சியினராக இணைத்துக் கொண்ட தனியரசு, தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் இடைத்தேர்தலுக்கு முன் கழுவும் மீன்களில் நழுவும் மீன்களாய் இருந்தனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் தினகரன் வென்ற பின் அ.தி.மு.க.விற்குள்ளேயே சில முக்கியஸ்தர்கள் ‘தினகரனை நம்மோடு இணைத்தால் என்ன?’எனும் ரீதியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரின் மனநிலை எப்படி இருக்கிறது?
“இந்த வெற்றியை தினகரனின் வெற்றியாக கூறிவிட முடியாது. ஏற்கனவே இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது சுமார் ஒரு லட்சம் வாக்குகளை தினகரனுக்காக சேகரித்து வைத்திருந்தனர் முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள். எனவே இது அ.தி.மு.க.வின் வெற்றிதான். ஆனால் இந்த வெற்றி மூலமாக தினகரனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மையே.
அ.தி.மு.க.வில் என்ன ஆச்சரியமும் நடக்கலாம். ஒருவேளை அவரை கட்சியினுள் இணைத்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.” என்றிருக்கிறார்.
அன்சாரியோ “ஒற்றுமையை எப்போதும் விரும்பியவர் ஜெயலலிதா. அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக முதல்வர் பழனிசாமி, தினகரன், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மனமாச்சரியங்களை தவிர்த்து மனம் ஒத்து இணைய வேண்டும். அ.தி.மு.க.வுக்கு தகுதியான தலைவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடையாளப்படுத்தி இருக்கிறது.” என்று சொல்ல,
கருணாஸோ...”அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போல தினகரனும் ஆளுமை நிறைந்த தலைவராக உள்ளார். நான் துவக்கத்திலிருந்தே சசிகலாவின் ஆதரவாளனாக இருப்பதை கவனியுங்கள், அதில் மாற்றம் வராது.
தினகரனின் ஆளுமைத்திறனை அ.தி.மு.க. தலைவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் இணைந்தது போல, இருவரும் தினகரனுடன் இணைய வேண்டும்.” என்றிருக்கிறார்.