சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸை தூண்டுவதே எடப்பாடியார்தான்... அதிமுகவுக்குள் நடக்கும் கும்மாங்குத்து..!

By Thiraviaraj RMFirst Published Oct 27, 2021, 5:37 PM IST
Highlights

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” என்று ஓபிஎஸ் கொளுத்திப் போட்ட நெருப்பு, பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்” என்று ஓபிஎஸ் கொளுத்திப் போட்ட நெருப்பு, பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து அவசரமாக தனது ஆதரவாளர்களை அழைத்து சேலத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் இரண்டுபட்டு நிற்கிறார்கள் நிர்வாகிகள். இது இரட்டைத் தலைமைக்குள் இன்னும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. 

சசிகலா விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்பு அனுசரித்து போக வேண்டிய அவசியம் என்ன? ஓ.பி.எஸுக்கு வந்த அழுத்தம் என்ன? அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். சட்டப்பேரவை தேர்தல் நேரத்தின்போது சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பாஜக மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோர் பாஜக மேலிடத்தின் கருத்தை கேட்கவில்லை.

இதனால், தான் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் வெற்றியும் பெற்றிருக்கலாம். அதே நேரத்தில் வரும் டிசம்பரில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நவம்பரில் வெளியிட வேண்டும். அவைத்தலைவர் தான் பொதுக்குழு அறிவிப்பை வெளியிட வேண்டும். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவால் அதிமுகவில் புதிதாக அவைத்தலைவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவராக முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகரை நியமிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் வலியுறுத்தி வருகிறார். 

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வலியுறுத்தி வருகிறது. இரட்டை தலைமைக்கு முடிவு கட்டி, பொதுச்செயலாளர் பதவியை பிடித்து ஒற்றை தலைமையில் கட்சியை வழி நடத்த எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதனால், பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதேவேளை தற்போது உள்ளது போலவே இரட்டை தலைமை தொடரட்டும். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டாம் என்ற முடிவில் ஓ.பி.எஸ்., இருந்து வந்தார். எடப்பாடி பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கும் தகவல் தெரிய வரவே, ஓ.பி.எஸ். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்கவும் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பதவி, பணம் போன்றவற்றை வழங்கவும் இரு தரப்பிலும் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்.ஸின் பேட்டியை அடுத்து முக்குலத்தோர் தலைவர்கள், எம்எல்ஏக்களிடம் எடப்பாடி உடனடியாக அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எடப்பாடிக்கு கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்த பொன்னையன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். ஓ.பி.எஸுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் உள்ளனர். சி.வி.சண்முகம் சகிலாவை மீண்டும் கட்சியில் இணைக்காத பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டார். அதிமுகவில் இரட்டை தலைமை தொடரும் என்று முடிவு எடுத்தால் ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளார். அதே நேரத்தில் பொதுச்செயலாளர் என்ற ஒற்றை தலைமை முடிவை எடுத்தால் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு எதிரான முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதனால், டிசம்பரில் பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக அதிமுகவில் மீண்டும் பிரச்னை பூதாகரமாக வெடிக்க தொடங்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து சமாதான முயற்சியில் அதிமுகவின் மற்ற தலைவர்கள் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் யார் பெரியவர் என்ற பரீட்சையில் ஓ.பி.எஸ், இபிஎஸ் தற்போது இறங்கியுள்ளனர். இதற்காக இரண்டு பேரும் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பாமகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் வடமாவட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று சி.வி.சண்முகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 

அவரும் தற்போது தன்னுடைய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகிறார். இதுவும் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரும் மாதத்தில் அதிமுகவில் பூகம்பம் வெடித்து, கட்சி மீண்டும் உடையும் நிலை ஏற்படலாம் என்றும் பேசப்படுகிறது. இதனால், அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

இருதரப்புக்கும் பதிலளிக்காமல் தனி ட்ராக்கில் அமைதியாக சென்று கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். இதனிடையே, “அரசியலில் தன்னை தேவரினத்தின் அடையாளமாகக் காட்டிக்கொள்ள நினைக்கும் ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு ஆதரவாக இப்போது கருத்துச் சொல்லி இருப்பது தேவர் ஜெயந்திக்காக மட்டுமே. அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி முடிந்து விட்டால், அவர் பழையபடி அமைதிப் புயலாகி விடுவார்” என்றும் கூறுகிறார்கள். 

ஓ.பி.எஸ் பேட்டியளித்ததை சசிகலா தரப்பு இப்போதும் உண்மையாக நம்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ் எந்த நேரத்திலும் எப்படியும் மாறுவார் என்பதால் அதனை சசிகலா தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அதனை வைத்து அரசியல் செய்யத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள். 
 

click me!