மொத்தமாக இந்துத்துவா தலைவராகவே மாறிய டாக்டர் கிருஷ்ணசாமி.. அண்டை நாடுகளில் இந்துக்களை பாதுகாக்க ஆர்பாட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2021, 5:37 PM IST
Highlights

தொடர்ந்து பேசிய அவர், உலகெங்கிலும் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் கலந்து கொண்டனர்,

இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் தொடர்ந்து இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், இதுகுறித்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அதை வலியுறுத்தியே தங்களது கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். தென்தமிழகத்தில் உள்ள (தலித் மக்கள்) தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் புதிய தமிழகம் என்ற கட்சியை துவக்கி அரசியல் செய்து வருபவர் கிருஷ்ணசாமி,  இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை கொங்கு வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்றும், பட்டியலில் இருந்து  அச்சமூகத்தை நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் வாக்கை குறிவைத்துள்ள பாஜக இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக  வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி பாஜகவுடன் கை கோர்த்து தமிழகத்தில் அரசியலை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக நிலைப்பாடுகளை அவர் முன்னெடுத்துவருகிறார். சொல்லப்போனால் பாஜகவின் மற்றொரு முகமாகவே செயல்பட்டு வருகிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது இருந்து வருகிறது. அந்தளவிற்கு தீவிர பாஜக ஆதரவு அரசியலில் புதிய தமிழகம் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை ஏற்றார், அப்போது பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இந்து மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் முழக்கம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, இந்தியாவைச் சுற்றியுள்ள பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இந்து சிறுபான் மையின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து இந்தியாவில் இருக்கக் கூடியவர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும், அப்படி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகதான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகெங்கிலும் ஹிந்துக்கள் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் கலந்து கொண்டனர், சமீபத்தில் பங்களாதேஷில் துர்கா பூஜை விழாவின்போது அந்நாட்டைச் சேர்ந்த ஜிகாதி குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் மூன்று இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர், இந்த சம்பவத்தை இந்தியா பகிரங்கமாக கண்டித்ததுடன் அங்குள்ள இந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு அண்டை நாடுகளில் இந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இநுதுக்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!