மழை நின்ற பிறகுதான் சென்றார் எடப்பாடி.. கொட்டும் மழையில் வந்தார் ஸ்டாலின்.. கெத்து காட்டும் மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2021, 11:21 AM IST
Highlights

ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் 720 கிலோமீட்டர் நீளத்திற்கு முக்கிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளது, எந்த முதல்வரும் மாநகராட்சி சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தது இல்லை, 

ஆண்டுக்கு தென்மேற்கு பருவமழை 30 சதவீதமாக இருக்கும், 70 சதவீதம் பெய்துள்ளது, வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகளவில் பெய்துள்ளது  என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 30 நீரோடைகள் உள்ளது அந்த நீர் கடலில் கலக்கும் போது கடலில் உள்வாங்கவில்லை என்றால் கால்வாயில் நீர் நின்றுவிடும், அதற்கு மழை சற்று நேரம் நிற்க வேண்டும், அப்போதுதான் தண்ணீர் வடியும் என அவர் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மழைக்குப் பின்னர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.குறிப்பாக வடசென்னை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதாவது வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப்பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்துள்ளது. சென்னையில் 12 மணி நேரத்தில் 23 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த தொடர் மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மொத்தம் 30 நீரோடையில் உள்ளது, மொத்த நீரும் கடலில் சேரும் போது, கடல் மட்டும் உள்வாங்க வில்லை என்றால் கால்வாயில் நீர் அப்படியே நின்று விடும், சில மணி நேரம் மழை விட்டால் மட்டுமே நீர் செல்லும், அப்போதுதான் வெள்ளம் வடியும் என்றார்.  

ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் 720 கிலோமீட்டர் நீளத்திற்கு முக்கிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளது, எந்த முதல்வரும் மாநகராட்சி சார்பில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தது இல்லை, ஆனால் நமது முதல்வர் செய்துள்ளார். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எதிர் கட்சி தலைவர் வெறும் நான்கு இடங்களை ஆய்வு செய்து விட்டு பேட்டி கொடுத்து வருகிறார், ஆனாலும் நாங்கள் அவரை வரவேற்கிறோம், ஆனால் தியாகராயநகரில் யாரும் வரவில்லை எனக் கூறுவது தவறு, விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் யாரும் வரவில்லை என்கிறார்கள்,  அங்குள்ள மக்களுக்கு தீபாவளி தொடங்கியது முதல் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட தகவல் கூட தெரியாமல் நியமிக்கவில்லை என்கிறார். கஜா உள்ளிட்ட புயலின்போது கூட மழை நின்ற பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமி சென்றார், ஆனால் மழை பொழியும்போது நம் முதல்வர் நேரில் வந்து ஆய்வு செய்கிறார். மக்கள் மனதார முதல்வரை பாராட்டுகின்றனர். மழையினால் ஏற்படும் பாதிப்புகளை அரசு தடுக்கின்றது, தொடர் மழை காரணமாக கடலுக்கு செல்லும் நீர் செல்வதில் சுணக்கம் உள்ளது, சிறிது நேரம் மழை நின்றால் நீர் வேகமாக செல்லும் வெள்ளம் வடியும், கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்களை தூர் வாரியிருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!