
இரட்டை இலை போச்சே! என்று பெரும் வருத்தத்தில் இருக்கும் தினகரனுக்கு, மேலும் எனிமா கொடுக்கும் வகையில் அவரது அணியை சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் எடப்பாடியின் கூடாரத்திற்கு படையெடுத்திருக்கிறார்கள்.
தமிழக மக்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிமிடத்துக்கு நிமிடம் ‘பிரேக்கிங்’ மோடிலேயே வைத்திருக்கும் அ.தி.மு.க.வில் இன்று நிறைய புதிய அதிரடிகள். அதாவது ஏழு பேர் கொண்ட அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் ஜெயலலிதா மற்றும் விசாலாட்சி நெடுஞ்செழியனின் இறப்பால் இரண்டு இடங்கள் காலியாகி கிடந்தன. பன்னீர்செல்வம், மதுசூதனன், தமிழ்மகன் உசேன், ஜெஸ்டீன் செல்வராஜ், வேணுகோபால் ஆகிய ஐவர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்நிலையில் அணிகள் இணைப்பு மற்றும் சின்னத்தை பெற்றது ஆகிய நிகழ்வுகள் அரங்கேறிய பின் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி 7 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவை 9 பேராக உயர்த்துவது என்று முடிவு செய்து. அதில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முணுசாமி, வைத்திலிங்கம் மற்றும் வளர்மதி ஆகிய 4 பேரை நியமிப்பது என்று முடிவாகியுள்ளது.
இந்த முடிவால் பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிர்ச்சி. காரணம் என்னதான் துணை முதல்வர் பதவியை தனக்கு தந்து, கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் தன்னை அமர வைத்தாலும் கூட முதல்வர் பதவியை வைத்திருக்கும் எடப்பாடி கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் தான் அங்கம் வகித்திருக்கும் ஆட்சிமன்ற குழுவிலும் புதிய திருத்தம் மூலம் எடப்பாடி வந்து உட்கார்ந்திருப்பதை பன்னீர் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
இது போக புதிதாக ஆட்சிமன்ற குழுவில் அமரப்போகும் நபர்களில் நான்கில் 3 பேர் எடப்பாடி அணியினரே. ஆக, மீண்டும் கட்சியில் பிளவு அதுயிதுவென ஏதாவது நிகழ்ந்தால் கட்சியின் கடிவாளம் தன் கையில் இருக்கும் வண்ணமே பாதுகாத்துக் கொள்வதற்காகவே எடப்பாடி தன் அணியின் பலத்தை பெருக்கியிருக்கிறார் என்று பன்னீர் கணித்து கடுப்பாக்கி இருக்கிறார்.
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர்களாக இருந்த 3 எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், விஜிலா மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் இப்போது முதல்வரை சந்தித்து, அவரது ஆலோசனை கூட்டத்தில் அமர்ந்துள்ளனர்.
இது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இலை போச்சு, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியாது என்று நிலை இருக்கும் சூழலில் தன்னோடு இருந்த அதிகாரம் படைத்தவர்களும் எதிரணிக்கு தாவியிருப்பதை தினாவால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த மூன்று எம்.பி.க்கள் தாவியிருப்பதன் மூலம் டெல்லியில் எடப்பாடிக்காக லாபி செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் வழுப்பெற்றிருக்கிறது என்பதே உண்மை.
ஆக, மொத்தத்தில் இன்று பன்னீர் மற்றும் தினகரன் ஆகிய இருவருக்கும் ஆப்பு மேல் ஆப்படித்து கட்சி மற்றும் ஆட்சி இரண்டு குதிரைகளின் கடிவாளங்களையும் கலக்கலாக பற்றி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி.