
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எடப்பாடி அணியின் பின்புலத்துடன் டிடிவி.தினகரன் களம் கண்டார். ஆனால், ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை
ரத்து செய்தது. மேலும் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்
எடப்பாடி-பன்னீர் தரப்பிபிலும், டிடிவி தினகரன் தரப்பிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் தரப்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. டிடிவி தினகரன் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். தொப்பி சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்ற பெயரில்
அவர் களமிறங்ககிறார். தினகரன், இந்த முறையும் தொப்பி சின்னத்தை பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதால் மேலும் நெருக்கடி அதிகரிக்குமோ என்ற அச்சம் காரணமாக சசிகலா குடும்பத்தினர் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலை எதிர்கொண்டு 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றால், மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். இதனை நடராஜன் தரப்பினர் விரும்பவில்லை.
அதேபோல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணித்தால், குடும்பத்தினருக்கு ஆபத்தும் இருக்காது என்றும் நம்புகிறார்களாம். தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் நடராஜன் தரப்பு கூறி வருகிறதாம். ஆனாலும், டிசம்பர் 1 ஆம் தேதி தினகரன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.