தினகரனை நம்பி நோ யூஸ்.. முதல்வர் பழனிசாமி அணிக்கு தாவிய தினகரன் ஆதரவு எம்பிக்கள்..!

First Published Nov 27, 2017, 5:59 PM IST
Highlights
dinakaran support MPs went to palanisamy faction


ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ். அவர் தலைமையில் தனி அணி செயல்பட்டது. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அவர் உயிருடன் இருந்தவரை அவரால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படாத தினகரனை, சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக, துணை பொதுச்செயலாளராக நியமித்தார்.

இதையடுத்து தினகரன் தலைமையில், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலானோர் செயல்பட்டனர். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்திற்கு தினகரன் அணியும் பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட்டதால், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

பிரசாரங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு, தினகரன் மீதான சிறிய சிறிய அதிருப்திகள், பூதாகரமடைந்து கொண்டே வந்தன. தினகரனை ஓரங்கட்டுவது எப்படி என முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

அந்த சமயத்தில், தினகரன் அணி, பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என மூன்று அணிகளாக இருந்தனர். அதற்கேற்றாற்போல தினகரனும் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் சிறைக்கு சென்றார்.

அதற்குப் பின்னர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி அணியும் இணைந்தது. இரு அணிகளும் இணைந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். பின்னர் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் தினகரன் அணியிலிருந்து பழனிசாமி அணிக்கு மாறினார்.

முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதன் விளைவாக, அணி மாறிய ஜக்கையனைத் தவிர மற்ற 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாடினர். தினகரன் தரப்பில், தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என கோரியதால், இருதரப்பு வாதங்களையும் கேட்டு, இருதரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்த தேர்தல் ஆணையம், இரட்டை இலையை பழனிசாமி அணிக்கே ஒதுக்கியுள்ளது.

அதனால், இரட்டை இலை, கட்சியின் பெயர், கட்சி கொடி என அதிமுக சார்ந்த அனைத்துமே பழனிசாமி அணிக்குத்தான் என்றாகிவிட்டது.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம், இரட்டை இலை என அனைத்து விவகாரங்களிலும் தினகரன் அணிக்கு தோல்வியே மிஞ்சுகிறது. நினைத்தது எதையுமே செய்ய முடியவில்லை. இரட்டை இலை சின்னம் இருக்கும் அணியே அதிமுக என்பதால், தொண்டர்களின் ஆதரவும் அவர்களுக்குத்தான் இருக்கும். தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள்., எம்பிக்களும் அவரது ஆதரவாளர்களுமே உள்ளனர்.

அதனால், இனிமேல் தினகரனுடன் இருந்து பலனில்லை என்பதால், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் சிலர் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு தாவ தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகின.

தினகரன் ஆதரவு எம்.பிக்களான விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ உமா மகேஷ்வரி உள்ளிட்டோர் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனைக்கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்களாக இருந்த நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகிய இரு தமிழக எம்பிக்களும் புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணனும் கலந்துகொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், ஜெயலலிதாவின் நினைவுநாள் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகிய இரு தமிழக எம்பிக்களும் புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணனும் கலந்துகொண்டுள்ளனர்.

ஏற்கனவே இரட்டை இலையை இழந்து தவித்துவரும் தினகரனுக்கு அவரது ஆதரவு எம்பிக்கள், முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது தினகரனுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!