
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் களை கட்டிவரும் நிலையில், மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ்க்கு அழைப்பு அனுப்ப வில்லை என்பதை வைத்து ஓர் அரசியல் கடந்த வாரம் களை கட்டியது.
ஓபிஎஸ்ஸின் பின்னணியில் இருந்து கொண்டு செயலாற்றும் மைத்ரேயன் எம்பி., திடீரென ஊடகங்களுக்கு தீனி போட்டார். இதனால் தினகரன் முகாம் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது. நாங்கள் சொன்னோமே... அவர்கள் ஒன்றாக இருக்கப் போவதில்லை! என்று வேண்டுமானாலும் பிரிவார்கள் என்று கூறியது. இதைத் தொடர்ந்து பிரிவினை எல்லாம் இல்லை... என்று கூறி ஒட்டுப் போடும் வேலைகளை மேற்கொண்டார்கள் ஓபிஎஸ்., இபிஎஸ் தரப்பினர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு பிளவுச் சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதை வெளிக் காட்டவும், ஒன்றுபட்டிருக்காவிட்டால் அனைவருமே காணாமல் போய் விடுவோம் என்பதைக் கூறும் வகையிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரிசையாக நேற்று டிவிட்டர் பதிவுகளைச் செய்திருந்தார். இன்று அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு கூடுவதற்கு முன்னால், தன் தரப்பில் மண்டியிட்டு, தனக்கும் பிரிவினைக் கருத்துகளுக்கும் தொடர்பு இல்லை என்பது போல் காட்ட முயன்றார்.
அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில்...
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவைத் தகர்த்து, இந்த இயக்கம், மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கே உரியது என்பதை நிருபிக்கும் வகையில்,
இந்த இயக்கத்தின் பெயரை,
இந்த இயக்கத்தின் கொடியை,
இந்த இயக்கத்தின் சின்னத்தை,
உண்மைத் தொண்டர்களாகிய நமக்கே உரிமையாக்கி, இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாசத் தொண்டர்களையும், மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்களது வழியில், நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர்,அண்ணன் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு,திட்டங்களை எல்லாம் சிறப்புடன் செயல்படுத்தி வருவதுடன், அம்மா அவர்களது சிந்தனை வழியில், பல புதிய திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தி வருகிறது.
புரட்சித்தலைவரின் வெற்றிச் சின்னம்,
அம்மா அவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட குடும்பத்தின் கரங்களில் சேராமல், அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கரங்களில் கிடைத்து விட்டது என்ற செய்தி அறிந்து, தமிழக மக்கள் அடைந்த மனநிறைவும், மனமகிழ்ச்சியும்
இதனை தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.
நாம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களையும், ஆவணங்களையும் நன்றாக ஆய்வு செய்த, இந்திய தேர்தல் ஆணையம், கழக நிர்வாகிகளும், உண்மையான அதிமுக தொண்டர்களும், நம்பக்கம் மட்டும் இருப்பதை உறுதி செய்து, இரட்டை இலைச் சின்னத்தை நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் சொன்னபடி, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற காரணத்தினால்தான், இன்று நாம் நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலையினை மீண்டும் பெற்று இருக்கிறோம்.
இதே ஒற்றுமையோடும், தமிழக மக்களின் அன்பான ஆதரவோடும்,அடுத்த மாதம் நாம் சந்திக்க இருக்கும்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம். நாம் சந்திக்கவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும், அமோக வெற்றியைப் பெற்று, வெற்றிக் கனிகளை, மாண்மிகு அம்மா அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்வோம்.
மாண்புமிகு அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையில், மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியை, தொடர்ந்து தமிழகத்தில் பீடுநடை போடச் செய்திடுவோம்.
இப்படி, மதுரை அழைப்பிதழ் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அப்படி ஒரு பிரச்னையே இல்லாதது போல் காட்டிக் கொள்ள முயல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதனைத் தம் டிவிட்டர் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இன்று அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எக்காரணத்தை கொண்டும் நாங்கள் உயிர் போனாலும் இனி பிரிய மாட்டோம் என அறுதியிட்டுக் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அ.தி.மு.கவில் வேற்றுமை இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது உண்மையில்லை. எக்காரணத்தைக் கொண்டும் இனி நாங்கள் உயிர் போனாலும் பிரிய மாட்டோம். புரட்சி தலைவி அம்மா ஒரே அணிதான்” எனக் கூறினார்.
அதாவது அதிமுக.,வில் அணிகள் இல்லை; ஒன்று பட்ட அதிமுக.,தான் உள்ளது என்பதைக் கூற முயன்றிருக்கிறார் எடப்பாடியார்.