
அ.தி.மு.க.,வின் ஆட்சி மன்றக் குழு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதில், புதிதாக உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர். ஆட்சி மன்றக் குழுவுக்கு 9 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிச.21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை ஒட்டி, கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வகையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்ற பின்னர், ஆளும் கட்சியாக உள்ள அதிமுக., ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக ஒரு இடைத்தேர்தலை சந்திக்கிறது.
ஜெயலலிதா இல்லாத சூழலில் வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. பொதுவாக, அ.தி.மு.க. வேட்பாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தது ஆட்சி மன்றக் குழு. இக்குழுவில் இருப்பவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியே தொகுதி வேட்பாளர்களைத் தேர்வு செய்வர். முன்னர், இந்த ஆட்சி மன்றக் குழுவில் ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் எம்.பி. என 7 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஜெயலலிதாவும், விசாலாட்சி நெடுஞ்செழியனும் இறந்து விட்டதால், மீதமுள்ள 5 பேர் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிதாக இரண்டு பேரைச் சேர்க்க அ.தி.மு.க. உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று அதிமுக., தலைமைக் கழகத்தில் கூடியது.
இந்நிலையில் திடீரென ஆட்சிமன்றக் குழுவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தினார். பின்னர், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் விவகாரத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், 9 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் புதிதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, வைத்தியலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனால், 7 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு ஒருவாறு சமாதானமாகி, 9 பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழு கூடி நாளை மறுநாள், அதிமுக., வேட்பாளரைத் தேர்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.