
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் முறையாக நடக்காது என்பதால் தேர்தலில் போட்டியில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எடப்பாடி அணியின் பின்புலத்துடன் டிடிவி.தினகரன் களம் கண்டார். ஆனால், ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.
நீண்ட இழுப்பறிகளுக்கு பிறகு ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கடந்த முறை அறிவித்த தேர்தல் அறிவிப்பை விட இந்த முறை மிகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காரணம் அதிமுகவினர் இரண்டு அணியாக பிரிந்து தேர்தலை களம் காண உள்ளனர். எடப்பாடி பன்னீர் தரப்பில் ஒரு அணியும் டிடிவி தினகரன் தரப்பில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளது.
திமுகவில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட மருது கணேஷே இந்த முறையும் களமிறங்குகிறார். ஆனால் எடப்பாடி பன்னீர் தரப்பில் சிக்கல் நிலவுகிறது. அதனால் யார் வேட்பாளர் என்று வரும் 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தினகரன் போட்டியிட்டார்.
அதேபோல், இந்த முறையும் தொப்பி சின்னத்திலேயே தினகரன் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. மறுபடியும் தொப்பி சின்னத்தை உரிமை கோருவதற்கு முழு முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் முறையாக நடக்காது என்பதால் தேர்தலில் போட்டியில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.