தமிழகத்தில் நடப்பது ஆட்சியா.? காட்டாச்சியா.? முடிவு கட்ட காத்திருக்கு மக்கள்- இறங்கி அடிக்கும் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Dec 21, 2022, 8:02 AM IST

உள்ளாட்சிப் பதவிகளை, பணம் காய்ச்சி மரமாகக் கருதி அவைகளை அராஜகமாக பறிக்க, எழுதப்படாத ஆள் தூக்கிச் சட்டத்தை முதுகெலும்பில்லாத இந்த திமுக அரசு கையாண்டு உள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையாகக் கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


திமுக நிர்வாகிகள் அராஜகம்

கரூரில் திமுக நிர்வாகிகள் செயலுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற 12 மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளில், 9 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், 3 இடங்களில் தி.மு.க-வும் வெற்றி பெற்றன. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக கழகத்தைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் அவர்களும், துணைத் தலைவராக திரு. தானேஷ் முத்துகுமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திரு. தானேஷ் முத்துக்குமார் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அவரது இடத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் தி.மு.க-வின் அராஜகம் காரணமாக தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

அதிமுகவினரை மிரட்டிய திமுக

தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த மேலும் 2 கவுன்சிலர்களை மிரட்டி திமுகவில் இணையவைத்தனர் இதனால், கவுன்சிலர்களின் எண்ணிக்கை 6-க்கு 6 என்று சமமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (19.12.2022) நடைபெற இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திரு. எஸ். திருவிகா அவர்களை ஜனநாயக முறையில் வெல்ல முடியாது என்பதால், திரு. திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி, கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர். மேலும், அந்த காரில் அமர்ந்திருந்தவர்கள் மீது திராவகத்தை வீசி ஒரு கொடும் கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆள் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி

திரு. திருவிகா அவர்களை இந்த அரசு பிறப்பிக்கப்படாத ஆள்தூக்கிச் சட்டத்தில் கரூர் மாவட்ட தி.மு.க-வினர், கூலிப் படையினரை வைத்து கடத்திச் சென்றிருக்கிறார்கள். ஆளும் கட்சி என்ற மமதையிலும், தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரிலும், இருமாப்பிலும் கூலிப்படையினரை ஏவிவிட்டு, கரூர் மாவட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் கோரத் தாண்டவம் ஆடி இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அராஜகம் குறித்து கடத்தப்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் திரு. திருவிகா அவர்களுடைய மகன் அளித்த புகாரை, கரூர் மாவட்ட காவல் துறையான திமுக-வின் ஏவல் துறை வாங்க மறுத்துள்ளது. திமுக-வின் இந்த அராஜகம் குறித்து அனைத்து காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேரடியாக செய்திகள் ஒளிபரப்பப்பட்டவுடன், வேறு வழியின்றி வேடசந்தூர் காவல் துறையினர் ஒப்புக்கு ஒரு புகாரை பெற்றுக்கொண்டனர்.

வேடிக்கை பார்க்கும் காவல் துறை

முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்த காவல் துறையினர், இதுவரை கடத்தலில் ஈடுபட்ட எந்த ஒரு திமுக கூலிப் படையினரையும், ரவுடிகளையும் கைது செய்யவில்லை. மேலும், அவர்கள் அனைவரையும் தப்பிக்கவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விநோதம் இந்த விடியா திமுக ஆட்சியில்தான் நடைபெறுகிறது. கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கவுன்சிலர்களை, தேர்தல் நடைபெறும் ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லவிடாமல், காவல் துறையினரே திமுக நிர்வாகிகளைப் போல் தடுத்த அவலமும் அரங்கேறி உள்ளது.

திமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு

மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பாக கருதப்பட வேண்டிய உள்ளாட்சிப் பதவிகளை, பணம் காய்ச்சி மரமாகக் கருதி அவைகளை அராஜகமாக பறிக்க, எழுதப்படாத ஆள் தூக்கிச் சட்டத்தை முதுகெலும்பில்லாத இந்த விடியா திமுக அரசு கையாண்டு உள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறேன்.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுவிட்டது என்பதற்கு இந்த கடத்தல் சம்பவமே எடுத்துக்காட்டு! இந்த காட்டாட்சிக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

 

click me!