அந்த அம்மா அதிமுகவிலேயே இல்ல... சசிகலா பற்றி கேள்விக்கு சுளீர் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 30, 2021, 2:17 PM IST
Highlights

தொடர்ந்து சசிகலா ஆடியோ வெளியிட்டு வருவது குறித்தும், எடப்பாடி பழனிசாமியை தேவையில்லாமல் முதலமைச்சராக்கிவிட்டேன் என பேசியுள்ளதும் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். தேர்தலில் சசிகலா அலை தீவிரமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருப்பதாக கூறிவிட்டு, ஆன்மீக பயணம் கிளம்பினார். 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தை அடுத்து, தற்போது கட்சியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. ஆனால் சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கக்கூடாது என கே.பி.முனுசாமி, ஜெயகுமார், எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதற்காக தமிழகத்தின் அதிமுக மாவட்டங்களில் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் தனக்கு எதிராக அதிமுக சார்பில் தீர்மான நிறைவேற்றப்பட்டு வந்தாலும், தினந்தோறும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு தலைமைக்கு தலைவலி கொடுத்து வருகிறார் சசிகலா. அதிமுக தொண்டர்கள் தொடங்கி முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் வரை, சசிகலாவுடன் உரையாடும் வீடியோ நாள்தோறும் வெளியாகி வருகிறது.  அனைத்துக்கும் அல்டிமேட்டாக ‘கொரோனா தொற்று மட்டும் குறையட்டும்... அதுக்கு அப்புறம் என் ஆட்டத்தை  காட்டுறேன்’ என்ற தோணியில்    சசிகலா பேசிய ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம்  தொடர்ந்து சசிகலா ஆடியோ வெளியிட்டு வருவது குறித்தும், எடப்பாடி பழனிசாமியை தேவையில்லாமல் முதலமைச்சராக்கிவிட்டேன் என பேசியுள்ளதும் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, “அந்த அம்மா அதிமுகவிலேயே இல்லை. அதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். ஆனால் ஊடகங்கள் சசிகலா பற்றிய செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் எவ்வளவோ செய்திகள் இருக்கிறது, பிரச்சனைகள் இருக்கிறது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவது குறித்து செய்திகள் வெளியாவதே இல்லை. அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள், ஆனால் சசிகலா யாரோ ஒருத்தருக்கு போன் செய்து பேசினால், அதை ஊடகங்களில் ஒளிபரப்பி வருகிறீர்கள். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே 10 பேரிடம் அல்ல தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை” எனத் தெரிவித்தார். 


      
மேலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா மீது கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,“மிரட்டல் விடுத்தால் யாராக இருந்தாலும் புகார் கொடுப்பார்கள். அவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

click me!