Edappadi Palanisamy : 2024-இல் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்.? எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை நிறைவேறுமா?

By Asianet TamilFirst Published Dec 17, 2021, 9:16 PM IST
Highlights

அன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இப்போது அது நடைபெற வேண்டும் என்ற ஆசையை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். 

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. திமுக 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியது. முக்கிய வாக்குறுதியான தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. 

மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. வாக்குகளைப் பெற கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. கட்டுமானத் தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிமெண்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். 

வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளை போடுகிறார்கள். மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு,  எவ்வளவு அவதூறு பரப்பினாலும் சட்டப்படி எதிர்கொள்வோம். மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகிற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” என்று எடப்பாடி பேசினார்.  எடப்பாடி பழனிச்சாமியின் ஹைலைட்டே 2024-இல் ஆட்சி முடிவுக்கு வரும் என்பதுதான். ஏற்கெனவே 4 மாதங்களுக்கு முன்பும் எடப்பாடி பழனிச்சாமி இதையேத்தான் பேசியிருந்தார். அதைவிட தேர்தல் முடிவு வெளியான பிறகு, தன்னைச் சந்திக்க வந்த அதிமுக நிர்வாகிகளிடமும் இதையேத்தான் எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய பேச்சு நாடு முழுவதும் பேசுபொருளானது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து எல்லா மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும் எண்ணத்தை பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பை தெரிவித்தது. தற்போதைய ஆட்சியின் பதவிக் காலத்தை குறைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அதிமுக எதிர்த்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்துள்ள 7 மாதங்களே கடந்துள்ள நிலையில், அன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இப்போது அது நடைபெற வேண்டும் என்ற ஆசையை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வர வேண்டுமென்றால், அதற்கான சட்டத்தை முதலில் கொண்டு வர வேண்டும். 

அதே வேளையில் அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. அத்திட்டம் அமலுக்கு வருகிறது என்றால், பல சட்டம் சார்ந்த முன்னெடுப்புகள் நடக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்து பாஜக தேர்தல்களுக்கு தயாராகிவரும் நிலையில், அத்திட்டம் அமலுக்கு வருமா என்பது தெரியவில்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை நிறைவேறுமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.   

click me!