
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். 3 பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் படிக்கின்றனர். இதில் பிரியதர்ஷினி 6-ம் வகுப்பும், நவீன்குமார் 1-ம் வகுப்பும், பிரித்திகா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் 3 பேரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். காலை 11 மணி அளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்ப வராததாக சொல்லப்படுகிறது.
அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் சிறுமி சடலம் கண்டெக்கப்பட்டது. சிறுமியின் முகம் தீயில் கருகிய நிலையில் இருந்ததால் அது பிரித்திகாவா? என்பதில் குழப்பம் இருந்ததாக சொல்லபடுகிறது. இதையடுத்து அந்த மாணவியின் அக்கா பிரியதர்ஷினியிடம் அடையாளம் காட்டச் சொல்லி கேட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், பள்ளி வளாகத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்தது காணமல் போன சிறுமி பிரியதர்ஷினி தான் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கபட்டு, பாதி எரிந்த நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாண்டிக்குடி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவி எரிந்து கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு காலி தண்ணீர் பாட்டிலும், அதன் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடந்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் அவற்றை கைப்பற்றிய போலீசார், மாணவியை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்கள் எப்படி நுழைந்தனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளிடம் சம்பவம் நடந்த போது சந்தேகப்படும்படி யாரேனும் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் “கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ் சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன். குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இக்கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.