#BREAKING சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு... ஏமாற்றத்தில் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published May 10, 2021, 1:31 PM IST
Highlights

தமிழக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்துள்ள அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 7ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே தேவை என்றும் முழங்கினர். அதிமுக 65 தொகுதிகளில் வெல்ல எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், தென் மாவட்டங்களில் அதிமுக தோற்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய ஈபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி புகார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. 

இந்நிலையில் இக்கூட்டம் மே 10-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சென்னை மாநகர போலீஸில் அதிமுக அனுமதி பெற்றனர். 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!