
’கூடிய சீக்கிரம் எடப்பாடி பொதுச்செயலாளராகிடுவார். நாம மளமளன்னு அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்ந்துடலாமுங்ணா!’
_ இப்படி பகல் கனவில் அல்ல பக்கா கனவில் மிதக்கிறது கொங்கு மண்டலம்.
அரசமரத்தடி பிள்ளையார் சிலை முன் உடைக்கப்பட்ட தேங்காயாக அ.தி.மு.க. சிதறிக்கிடக்கும் கதையை அலசித்தள்ளியாகிவிட்டது பல முறை. எனவே நேரடியாக விஷயத்துக்குள் நுழைவோம்.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி தங்களுக்கும் சசி மற்றும் தினகரனுக்கும் எந்த சம்பதமுமில்லை என்று அறிவித்து மாதங்களாகிவிட்டது. ஆனால் இந்த வாதத்தை தகர்த்து தங்கள் ஆளுமையை நிரூபிக்க வெளியிலிருந்து தினகரனும், உள்ளேயிருந்து சசியும் போராடினார்கள்.
எடப்பாடி டீமுடன் மோதி வெறுத்துப்போன தினகரன் தனி அணியை துவக்கிவிட்ட நிலையில் , தன் தம்பி திவாகரனை களமிறக்கி சூழலை சாதகமாக்கப் பார்த்தார் சசி. அதுவும் வேலைக்காகவில்லை.
இந்நிலையில்தான் நேற்று தன்னைப் சந்திக்க சிறை வந்திருந்த தம்பிதுரையிடம் அழுத்தமாக எச்சரிக்கை கொடுத்து அனுப்பியிருக்கிறார் சசிகலா. பழைய மரியாதைய மறந்து, ஆட்சி கையிலிருக்கும் ஜோரில் ஆட்டம் போட்டால் ஒரு நொடியில் ஆட்சியை கலைத்துவிடுவேன் என்று எச்சரித்திருந்தார் சசி.
இந்நிலையில் எடப்பாடி டீமோ வேறுவிதமான கொண்டாட்ட கற்பனையிலிருக்கிறது. குறிப்பாக சொல்வதானால் எடப்பாடியின் சொந்த மாவட்டம் சேலம். கிட்டத்தட்ட கொங்கு மண்டலத்தினுள் அடங்குகிறது இந்த மாவட்டம். இந்த மண்டலத்தினுள் அடங்கும் நாமக்கல்லை சேர்ந்த தங்கமணி, கோவையை சேர்ந்த வேலுமணி, ஈரோட்டை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரும்தான் எடப்பாடிக்கு உறுதுணையாக நின்று ஆட்சியை வழி நடத்துகிறார்கள். இவர்களை தாண்டி ஜெயக்குமாரும், சி.வி. சண்முகமும் சீனுக்கு வந்து வந்து போகிறார்கள்.
ஆக தமிழகத்தின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கையில் வைத்திருப்பது கொங்கு மண்டல அ.தி.மு.க.தான். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடி அடங்கிய கொங்கு அ.தி.மு.க.வில் ஒரு உற்சாக செய்தி சிறகடிக்கிறதாம். அது எடப்பாடியார் கூடிய விரைவில் கழக பொதுச்செயலாளர் ஆகிவிடுவார் என்பதுதானாம்.
ஏன் முளைக்கிறது இந்த தகவல், எப்படி அது சாத்தியம்?...என்பதற்கு விளக்கம் கூறும் அரசியல் பார்வையாளர்கள் “சசி மற்றும் தினகரன் எனும் இரு ஆளுமைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்தியது வேலுமணி மற்றும் தங்கமணி எனும் இருவரின் லாபிதான். இவர்கள் உடனிருக்கும் தைரியத்தில் எடப்பாடியார் மெதுவாக தன் ஆளுமையை கட்சி மற்றும் ஆட்சியில் அழுந்தப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.
சொல்லப்போனால் தன்னை ஜெயலலிதா போலவே எண்ண துவங்கிவிட்டார். அவரது செயல்பாடும் அப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதா போலவே சென்னை வர்த்தக மைய கட்டிடத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு வைபவத்தை தனது ரிஸ்கில் நடத்துகிறார் எடப்பாடி. இது அவரது அதிகார தோரணை தாகத்தையும், தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியையும் காட்டுகிறது.
அதேபோல் இன்னொரு விஷயத்தை பெரிதாய் நம்புகிறது கொங்கு அ.தி.மு.க. அதாவது சசிகலா கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என்று எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி வந்துவிட்டால் சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரனின் பதவியும் ரத்தாகும்.
இது நடந்துவிட்டால் சசி லாபியை முற்றிலுமாக மிக எளிதாக கட்சியிலிருந்து தூக்கி வீசி வெளியேற்றிவிடலாம். அதன் பிறகு எதிர்ப்பே இல்லாமல் எடப்பாடியார் பொதுச்செயலாளராகலாம் என்று திட்டமிடுகிறார்கள். வேறு விதியேது என்று தொண்டன் அவரை ஏற்பான். ஆனால் மக்கள் அபிமானம் கிடைக்குமா? என்பது முக்கிய கேள்வி. அதற்கும் பதில் இருக்கிறது அவர்களிடம். இப்போது கல்வித்துறையில் நடக்கும் புரட்சி மூலம் மக்களை அத்துறை கவர்வது போல், அத்தனை துறைகளிலும் புதிய கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மொத்த மக்களையும் கவரலாம் என்று நினைக்கிறது கொங்கு அ.தி.மு.க.
எடப்பாடி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகிய நால்வதும் கட்சியின் முக்கிய பொறுப்புகலை பிடிக்கும் போது தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்கள் முரண்டு பிடிக்கலாம். அதனால் அவர்களை சமாதானம் செய்யும் வகையில் வாரியம், ராஜ்யசபா எம்.பி., அமைச்சர் பதவிகள், கட்சியிலேயே இருக்கும் மாநில பதவிகளை விஸ்தரித்து கூடுதல் நபர்களை இழுத்துக் கொள்வது போன்ற காரியங்களை செய்து சரி கட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள்.
தினகரன் அணி மற்றும் பன்னீர் அணி எம்.எல்.ஏ.க்கள் எந்த காலத்திலும் ஆட்சியை கலைக்க விடமாட்டார்கள். ஏனென்றால் ஆட்சி இருக்கும் வரையில்தான் எம்.எல்.ஏ. அதிகாரமும், வருவாயும் இருக்கும். ஆட்சி கலைந்தால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எந்தளவுக்கு இருக்குமென்பது புதிர்தான் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் என்பதே எடப்பாடி டீமின் கணிப்பு. ஆக சும்மா உதார் விடுவார்களே தவிர உள்ளுக்குள் ஆட்சி தொடரும் ஆசையில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று அழுத்தமாய் நம்புகிறது ஆளும் அணி.
கொங்கு அ.தி.மு.க.வின் ஆசையும், எதிர்பார்ப்பும் இப்போது இப்படித்தான் இருக்கிறது. கடினமான கனவுதான் ஆனால் பலிக்கும் என்றே நம்புகிறார்கள்.” என்று விவரிக்கிறார்கள்.
ஒருவேளை இந்த விவகாரத்தை தினகரன் ஸ்மெல் செய்ததால்தான் சிறையில் சசியை பார்க்கும்போது பொங்கி தீர்த்தாரோ!?...