
பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை, குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், எதிர்க்கட்சிகளும் அவரை ஆதரிக்கும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் இதுவரை அந்த உறுதியை வழங்கவில்லை. ராம்நாத் கோவிந்த் தலித்தாக இருந்தாலும், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் குழப்பம் நீடிக்கிறது.
ஆனால், தற்போதுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் 48 .93 சதவிகித வாக்குகள் உள்ளன. எஞ்சிய 51 .07 சதவிகித வாக்குகள் வெளியில் உள்ளன. ஆனால் இந்த ஒட்டுமொத்த வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு போய் சேருவதற்கான வாய்ப்பு இல்லை.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2 சதவிகித வாக்குகளையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 1 .53 வாக்குகளும் கொண்டுள்ளன. இவ்விரு கட்சிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆகவே, வெற்றி பெறுவதற்கான 51 சதவிகித வாக்குகளை பாஜக ஏற்கனவே கைவசம் வைத்துள்ளது. இது தவிர சிவசேனாவின் வாக்குகளும் பாஜகவுக்கே சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பல்வேறு மாநில கட்சிகளுடனும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதனால், பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உள்ளது.
அதே சமயம், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் அதிமுகவுக்கு 6 சதவிகித வாக்குகள் உள்ளன.
அதனால், குடியரசு தலைவர் தேர்தலை பொறுத்தவரை, அதிமுகவின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுகவின் வாக்குகள் முழுமையாக கிடைத்தால், பாஜகவின் வெற்றி ஒரு பெரிய வெற்றியாகவே இருக்கும். அதனால், அதிமுகவின் வாக்குகளை பெற பாஜக முக்கிய தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
ஆனால், அதிமுக வாக்குகள் என்பது, தற்போது மூன்றாக பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி பக்கம் அதிக அளவிலான எம்.எல்.ஏ க்களும், எம்.பி க்களும் உள்ளனர். அதற்கு அடுத்து தினகரன் மற்றும் பன்னீர் பக்கமும் எம்.எல்.ஏ, எம்.பி. க்கள் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்த மூன்று அணிகளின் வாக்குகளும், பாஜகவுக்கு கிடைக்குமா? அல்லது பிரியமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து, பொது செயலாளர் சசிகலாதான் முடிவெடுப்பார் என்று தினகரன் நேற்றே அறிவித்தார்.
அதே சமயம், சசிகலா அதிகாரபூர்வமாக, இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், பாஜகவின் நிர்பந்தம், அதிமுக வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெற்றுவிடும் என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.