
சரவணன் வீடியோ விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் அளித்த புகாரை அடுத்து, கவர்னர், எழுதிய கடிதத்தால், ஸ்டாலினுக்கு வெற்றியா? என்பது எல்லோர் முன்னிலையிலும் உள்ள கேள்வி.
கடந்த பிப்ரவரி மாதம் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைத்த விவகாரத்திலும் பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய விவகாரத்திலும் நடைபெற்ற விஷயங்களை, மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணனும், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜும் புட்டு புட்டு வைக்க அவை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கிய விவகாரம் குறித்து, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது.
சட்டசபையிலும் இந்த பிரச்சனையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின. பின்னர், கவர்னரிடமும், திமுக தோழமை கட்சிகளுடன் புகார் அளித்தது. இதை அடுத்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில், இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்த விவகாரத்தில், திமுகவுக்கு வெற்றி என்று ஒரு சாரர் கூறும் நிலையில், மேலோட்டமாக திமுகவிற்கு வெற்றிபோல் தோன்றினாலும், உண்மையில் இது அதிமுகவிற்கே சாதகமாக அமைந்துள்ளது.
கவர்னர் தன்னுடைய கடிதத்தில், தகுந்த நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முதலில், எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் சட்டமன்றத்தில் பெரிய பிரச்சனையாக எழுந்த நிலையில், கவர்னரின் இந்த கடிதத்தை பயன்படுத்தி சபாநாயகர், கவர்னர் கடிதம் வந்துள்ள காரணத்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
ஆகவே, இந்த பிரச்சனையை கிளப்பாதீர்கள் என்று சட்டசபையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மறுபுறம், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் கவர்னர் அளித்த கடிதத்தின்பேரில் நடவடிக்கை எடுக்க தங்களது அரசு, தீர்மானித்துள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்.
இதன் மூலம் சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்று, உயர்நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.
மூன்றாவதாக, இந்த பிரச்சனையை, நடவடிக்கை என்ற பெயரில், மாதக்கணக்கில், தமிழக அரசு ஒத்திப்போடலாம். அடுத்தடுத்து உள்ளாட்சி தேர்தல், 2ஜி வழக்கில் தீர்ப்பு என்று வரும்போது, சி.டி. விவகாரம் முற்றிலுமாக பின்தள்ளப்பட்டு விடும். ஆகவே, கவர்னரின் கடிதம் திமுகவிற்கு வெற்றி அல்ல. அது எடப்பாடி அரசுக்கே சாதகமாக அமைந்துள்ளது என்பதே உண்மை.