"பேயாம ஊரு பக்கம் வந்து சோலிய பாருப்பே!" : பன்னீருக்கு அட்வைஸ் கொடுத்த தேனி பெருசுகள்!!

First Published Jun 21, 2017, 2:47 PM IST
Highlights
theni oldmen advice to ops


அசெம்ப்ளிக்கே லீவு போட்டுவிட்டு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஆஜரான பன்னீர்செல்வத்தை ’கவலைகள்தான் உங்களோட பெரிய எதிரி. உள் பதற்றத்தை தணியுங்க.’ என்று அட்வைஸி அனுப்பியிருக்கிறதாம் சிகிச்சை மைய வட்டாரம். 

தமிழக அரசியலில் ஓஹோவென வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வாம், ‘ஓஹோ அவர் இங்கேதான் இருக்கிறாரா?’ன்னு கேட்குமளவுக்கு செல்வாக்கு சரிந்து சைலண்ட் ஆகிவிட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் கோவையிலுள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமணைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். ‘புத்துணர்வு சிகிச்சையோடு, வயிறு சம்பதமான ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வந்திருக்கிறார்.’ என்று தகவல் கிடைத்தது. 

அம்மருத்துவமணையில் தங்கிய பன்னீருக்கு உளிச்சல், பிழியல் உள்ளிட்ட அத்தனை பாரம்பரிய ட்ரீட்மெண்டுகளையும் கொடுத்து அவருக்கு இருந்த கரைச்சல்களை சரிகட்டி அனுப்பியது மருத்துவமனை. கோவையிலிருந்து தேனி நோக்கி தேனீ போல் உற்சாகமாய் கிளம்பிய பன்னீர் ஆன் தி வேயில் பல ஆலயங்களை தரிசித்துவிட்டு சென்றார். 

புத்துணர்வு சிகிச்சைக்குப் பின் பன்னீரின் உற்சாகத்தை பார்த்து ‘தல இனி டாப் கியர்லதாண்டா அரசியலை நகர்த்தும்!’ என்று கலகலப்பானார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அப்படியேதும் நிகழவில்லை.

சொல்லப்போனால் அதன் பிறகு வெடித்திருக்கும் ’எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு’ ஸ்டிங் ஆபரேஷன் விவகாரத்தில் ஓவராய் மண்டை காந்திருப்பது பன்னீர்தான். இவரது அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.வான சரவணன் தான் அந்த வீடியோ படத்தின் கதாநாயகன் என்பதால் மொத்த அழுத்தமும் பன்னீரின் மேல்தான் விழுகின்றன. பாரபட்சமே பார்க்காமல் ஸ்டாலின் தரப்பு  இந்த விவகாரத்தை கையிலெடுத்து ஆடுவதால் நொந்து கிடக்கிறார் பன்னீர். 

‘அம்மாவின் இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும்’ என்கிற ஈர்ப்பான கோரிக்கையுடன் தனி அணி அமைத்த பன்னீருக்கு பயங்கரமான மக்கள் செல்வாக்கு உருவானது ஆனால் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமலும், எந்த விஷயத்திலும் தீர்க்கமான செயல்பாட்டை காட்ட முடியாமலும் தவித்து விழி பிதுங்குகிறார்.

‘பா.ஜ.க.வின் கைப்பிள்ளை, எடப்பாடி அணிக்கு எதிரான ஏப்பசாப்பை டீம்.’ என்றெல்லாம் பன்னீருக்கு எதிரான விமர்சனங்கள் வெடித்திருக்கும் நிலையில் இந்த வீடியோ விவகாரமும் அவரது அணியை போட்டு துவைத்து எடுக்கிறது. 

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்  கோவை வந்து மீண்டும் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அட்மிட் ஆனார் பன்னீர். போன தடவை விரிவான சிகிச்சை எடுத்த பன்னீருக்கு, ஒரு சின்ன இடைவெளி விட்டு மீண்டும் மருந்துகள் கொடுக்க வேண்டியிருந்ததால் வந்திருந்தார் என்று அவருக்கு நெருக்கமான கோவை வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆனால் அதே நேரத்தில் வேறு சில உள் தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது பழைய சிகிச்சையின் தொடர்ச்சிக்காக வந்திருந்தாலும் கூட தனக்கு  உடல் ரீதியாக இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாக வைத்தியர்களிடம் சொன்னாராம் பன்னீர். அவர்கள்  தெளிவாக ஆராய்ந்துவிட்டு, ‘உங்களுக்கு பிரச்னையே உங்க மனசுதான்.

எதற்கும் பெரிய எமோஷன் காட்டாமல், கோபமா, சந்தோஷமோ எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே அடக்கி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறது. இந்த சுய அடக்க பழக்கம் நல்லதுதான் என்றாலும் கூட அதுவே கெட்டதும்தான். உணர்ச்சியை உள்ளேயே அமுக்கி அமுக்கி வைத்தால் ஒரு கட்டத்தில் அது வெடிக்கும் அல்லது பக்க விளைவுகளை உருவாக்கும். 
உங்களுக்கு அது பக்கவிளைவுகளை உருவாக்கி இருக்கிறது. உங்களுக்குள் அதிகப்படியாக உள் பயம் இருக்கிறது. உங்கள் முகத்தில், செய்கையில் அது தெரியாவிட்டாலும் கூட உள் உடம்பை நிறையவே பாதிக்கிறது. இந்த பயத்தை விட்டொழியுங்கள். கவலைதான் உங்களின் ஒரே எதிரி.” என்று அட்வைஸ் மழை பொழிந்திருக்கின்றனர். 

பன்னீர் இங்கே இருந்த நேரத்தில் அவரது சொந்த ஊரை சேர்ந்த மற்றும் அவருக்கு மிக நெருக்கமான பெரியவர்கள் சிலரும் பன்னீரை சந்தித்திருக்கின்றனர். இவர்களிடம் தானொரு அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் என்கிற இறுக்கமில்லாமல் மிக வெளிப்படையாக, உடைத்துப் பேசுவார் என்பதால் பன்னீரின் மகனே இவர்களை தேனியிலிருந்து கோவைக்கு காரியில் அனுப்பி வைத்திருக்கிறார். 

இந்த சீனியர்களை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டுப்போனாரம் பன்னீர். பல விஷயங்களையும், தன் மீது இருக்கும் அழுத்தத்தையும், அதீத பொறுப்புகளையும், இயலாமையும் சொல்லி உடைந்திருக்கிறார். 

நிதானமாக கேட்ட அவர்கள் “எதுக்குப்பே இப்படி கலங்குற? இப்போ என்ன நடந்துடுச்சுன்னு இம்புட்டு  பிரச்னைகளை இழுத்துப் போட்டுக்குற! சாதாரண பயலா  இருந்த நீ இந்த நாட்டுக்கே (?!) முதலமச்சரா வருவேன்னு யாருப்பே எதிர்பார்த்தோம். ஒன்னோட விசுவாசத்தால அம்மா உன்னய ஒசரத்துல உக்காரவெச்சாகலா இல்லையா! 
அம்புட்டுதேம். அதோடு விட்டுடணும். தெரிஞ்சோ தெரியாமலோ சொந்த கட்சியவே பகச்சுகிட்டு நிக்குற.

இதுல அதையுமிதையும் மனசுல போட்டு அல்லாடாத. போறது போறபடி இருக்கும், வாரது வர்றபடி இருக்கும். எல்லாத்தையும் மேலே இருக்குறவம் பார்த்துக்குவாம். நீ கலங்காதப்பே. 

பேயாம ஒரு பத்துப் பதினஞ்சு நாளிக்கு ஊருல வந்து ஒக்காருப்பே, முடிஞ்சா டீக்கட சோழிய பாருப்பே. காடு, களனின்னு மனசார நட, கோழி கெளதாரின்னு சாப்பிடுப்பே. தானா சரியாயிடும் மனசும், ஒடம்பும். அதவிட்டுப்புட்டு இங்கிட்டு வந்து கெடக்குறவன். எழும்புப்பே, வா!” என்று வெள்ளந்தியாக பேசி கையை பிடித்து இழுத்தார்களாம். 

இவர்களிடம் பேசிய பிறகு மனசு எவ்வளவோ ரிலாக்ஸ்டான பன்னீர், சின்ன ஓய்வை பற்றி யோசிப்பதாக சொல்லி அனுப்பியிருக்கிறார். 
ஹும், பன்னீரு ஓரு ஆங்கிள்ல நீங்க பாவம்தாம்பே!
 

click me!