
’இருக்குற பஞ்சாயத்தெல்லாம் போதாதா, இது வேறயா’ என்று ஓ.பி.எஸ்.ஸை ஓவராக ஃபீலிங்கில் ஆழ்த்தியிருக்கிறது அவரது மகன் ரவீந்திரநாத் தலைமறைவாகிவிட்டதாக படபடக்கும் தகவல்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் தான் ரவீந்திரநாத். பன்னீர் முதல்வரான போதுதான் ரவியின் பொதுவாழ்க்கை பிரவேசம் துவங்கியது. சொந்த மாவட்டமான தேனியில்தான் இதற்கான கியரை போட்டார் ரவி. முதல்வரின் மகன் எனும் முறையில் தேனி மாவட்ட அ.தி.மு.க. வைபவங்களில் ரவியின் முகங்கள் பிளக்ஸ்களில் பளிச்சிட்டன. இது போக தனியார் கல்யாணம், கிடாவெட்டு, காது குத்து நிகழ்ச்சிகளின் ஃபிளக்ஸ்களிலும் ‘முதல்வரின் மகனே! இளைய நம்பிக்கையே! எங்கள் தம்பியே!’ என்று ரவியை ரவுசாக அட்ரஸ் செய்து போஸ்டர்களும், ஃபிளக்ஸ்களும் பல்லைக் காட்டின.
இப்படியாக மக்கள் மத்தியில் அறிமுகமான ரவீந்திர நாத்தை கட்சிக்குள் மெதுவாக மையப்படுத்த ஆரம்பித்தார் பன்னீர். அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தேனிமாவட்ட செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்தார். இதன்பின் தேனியின் ஆக்டிங் மா.செ.வாக வலம் வர ஆரம்பித்தார். பன்னீர் குடும்பத்தின் ஆதிக்கம் பெருகி வருவதை கண்டு முணுமுணுக்க ஆரம்பித்த தங்கத்தமிழ்செல்வனின் மாவட்ட செயலாளர் பதவி இதற்காக பறிக்கப்பட்டது.
இன்றைக்கு டி.டி.வி.யை தலையில் தூக்கி வைத்து தங்கத்தமிழ் ஆடுவதற்கு ரவி அன்றைக்கு கொடுத்த குடைச்சல்தான் முக்கிய காரணம் என்பது தேனி மாவட்ட அ.தி.மு.க. தொண்டன் அனைவரும் அறிந்தது தனி கதை.
சரி மீண்டும் ரவி விஷயத்துக்கு வருவோம். மெதுவாக விரிய ஆரம்பித்த ரவியின் ராஜ்ஜியம் பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர்களை நியமிப்பது வரை போய் நின்றது. வெளிநாடுகளிலும் பிஸ்னஸ் கரங்களை நீட்ட துவங்கினார். வெளிநாட்டில் ஹோட்டல் தொழில், கப்பல் பிஸ்னஸ், சினிமா வெளியீட்டு உரிமை என்று ரவியின் கடல் தாண்டிய பிஸ்னஸ்கள் ஆக்டோபஸ் கரங்களாய் விரிந்தன.
இந்த நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட்டை குறிவைத்தாராம் ரவி. இந்த நேரத்தில் சசி டீமுக்கும் பன்னீருக்கும் இடையில் உள் பகை உச்சத்தில் நின்றது. இதனால் ரவியின் ப்ரொஃபைலை உளவுத்துறை மூலமாக திரட்டி ஜெ.,விடம் பக்குவமாய் சமர்ப்பித்தார் சசி. பொருளாதார ரீதியில் பன்னீர் குடும்பத்தின் வளர்ச்சியையும், ரவியின் விஸ்வரூபத்தையும் கண்டு அதிர்ந்த ஜெ., அவரது எம்.பி. சீட் கனவுக்கு செக் வைத்தார். இதன் பிறகு ரவி வெளிநாடு மற்றும் உள்நாடு என்று சுற்றிக் கொண்டிருந்தார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் பன்னீர் மீண்டும் முதல்வரானதும் மீண்டும் சென்னையில் செட்டிலானார் ரவி. முதல்வர் பதவியை இழந்த பன்னீர் சசியை எதிர்த்து தனி அணி அமைத்தபோது அப்பாவுக்காக முழு வீச்சில் களமிறங்கிய ரவி சசி அணியிலிருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியை திரைமறைவில் வெகு தீரமாக செய்தார்.
சில எம்.எல்.ஏ.க்களுடன் ரவி டீல் பேசியதாக சில ஆடியோ பதிவுகள் கூட வெளியாகி தெறிக்கவிட்டன.
தனி அணி துவக்கிய பன்னீர் பெரிதாய் அவதாரம் எடுப்பார் என்று பார்க்கப்பட்ட நிலையில் சமீப சில காலமாய் அவரது செல்வாக்கு மிகவும் படுத்து அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அவரது மகன் ரவியை காணவில்லை என்று ஒரு தகவல் பரபரக்க துவங்கியிருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூரில் பிடிபட்ட அன்புநாதனின் விவகாரம் மற்றும் சென்னையை சேர்ந்த பில்டிங் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று ஆகியவற்றில் ரவியின் பெயர் அடிபடுவதால் அவருக்கு எதிராக எடப்பாடி டீம் கைது நடவடிக்கையை பாய்ச்சலாம் என்று பன்னீருக்கு ஒரு தகவல் கிடைத்ததாம். தனி அணி அமைத்து அ.தி.மு.க.வுக்கு டார்ச்சர் கொடுக்கும் தன்னை (பன்னீர்) வழிக்கு கொண்டு வர எடப்பாடி அண்ட்கோ ரவியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்று பன்னீர் பயப்படுவதால் அவரை எங்கேயோ சில காலம் சென்று செட்டிலாக பணித்திருக்கிறார் என்கிறார்கள்.
ரவி வெளிநாடுக்கு போய்விட்டார் என்றும், இல்லை உள்நாட்டிலேயே வட இந்திய பகுதியில் தங்கியிருக்கிறார் என்றும் பல ரக தகவல்கள்.
இந்த அலசல்களுக்கெல்லாம் முடிவு கட்ட ரவி உடனே வெளிப்படுவது பன்னீரின் செல்வாக்குக்கு நல்லது! என்கிறார்கள் விமர்சகர்கள்.