
அதிமுகவுக்கு பாஜகவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை…. – பொறிந்து தள்ளும் பொன்னார்
அதிமுகவுக்கு பாஜகவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதற்கு மோடியின் நிர்ப்பந்தம்தான் காரணம் என்று தமிழக எதிர்க்கட்சியினர் கூறுவது தவறானது. அதிமுகவினரை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இரண்டு கூட்டணியை சேர்ந்தவ வேட்பாளர்கள். ஒருவர் பாஜகவை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், மற்றொருவர் காங்கிரசை சேர்ந்த மீராகுமார்.
இதில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருக்கும்போது அந்தக் கூட்டணி நிறுத்துகிற வேட்பாளரை அதிமுக எப்படி ஆதரிக்கும்? அதனால்தான் வேறு வழியில்லாமல் அதிமுக அணிகள் பாஜகவை ஆதரிக்கின்றன. இதில் மோடியை இழுப்பது அர்த்தம் இல்லாத விஷயம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என பலரும் கூறுகின்றனர். அதில், தமிழகத்தை ஆளும் அதிமுக நடந்துகொள்ளும் முறையில்தான் இருக்கிறது.
அ.தி.மு.க. அரசாங்கம் இருக்குமா? கவிழுமா? என்பது அவர்கள் கட்சியின் நடவடிக்கையை பொறுத்தது. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசாங்கம் கவிழக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஆட்சி கவிழவேண்டுமென்று தி.மு.க ஒவ்வொரு நாளையும் கணக்கிட்டு கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.