
அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின், தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருபாச்சூர் பகுதியில் திமுகவினர் ஏரியை தூர்வரும் பணி இன்று தொடங்கினர். இதனை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் அணிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் அதை தலைமையேற்று நடத்த யாரும் இல்லை. இதைவைத்து தமிழகத்தில் தற்போது ஆட்சியை எப்படித் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றே அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சியை வைத்து கூட்டாக கொள்ளையடிக்கிறார்கள்.
சட்டமன்றத்தில், நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர் தனபால் சர்வாதிகாரப் போக்குடன் நடக்கிறார். தமிழகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரம் சம்பவம் பற்றி கவர்னரிடம் புகார் கொடுத்தோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், சட்டமன்ற சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி நடைபெறவில்லை.
அடுத்த மாதம் டெல்லியில், இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும், தமிழகம் முழுவதும் பொது தேர்தல் நிச்சயம் வரும்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா முறையாக குடியரசு தலைவருக்கு போய் சேரவில்லை. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.