
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்கே நகர் இடை தேர்தலின்போது, தீபாவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடைபெற இருந்தது. இதில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிட்டார். தொடர்ந்து அவர், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதையொட்டி கடந்த ஏப்ரல் 4ம் தேதி, ஜெ.தீபா பேரவையின் உயர்மட்ட குழு நிர்வாகி பசும்பொன் பாண்டியன் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், மார்ச் 28ம் தேதி ஜெ.தீபாவின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், ‘தேர்தல் பிரச்சாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். மீண்டும் ஏப்ரல் 2ம் தேதி செல்போனில் பேசிய நபர், ஜெ.தீபாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜெ.தீபாவுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில், பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடைய சென்னை எழும்பூரை சேர்ந்த முகமது காசீம் என தெரிந்தது.
இதைதொடர்ந்து மாம்பலம் போலீசார் இன்று காலை முகமது காசீமை கைது செய்தனர். அவரை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.