
அனைத்து அமைச்சர்களின் ஆதரவும் தினகரனுக்கே உள்ளது எனவும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தினகரனாலையே முடியும் எனவும் அதிமுக அம்மா அணி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, திடீரென அதிமுகவை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தினகரனின் தீவிர விசுவாசியாக மாறிய நாஞ்சில் சம்பத் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அனைத்து அமைச்சர்களின் ஆதரவும் தினகரனுக்கே உள்ளது எனவும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தினகரனாலையே முடியும் எனவும் தெரிவித்தார்.
எல்லா அமைச்சர்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மன நிலையில் தான் இருக்கிறார்கள் எனவும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தினகரன் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயக்குமார் தலைமையில் அமைச்சரவை தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில், ஜெயக்குமார் மட்டுமே எதிராக உள்ளதாகவும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
ஒரு எம்.எல்.ஏக்கள் கூட தினகரனை சந்திக்க மாட்டார்கள் என கூறிய ஜெயக்குமார் இப்போது என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார்.
மேலும், கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் வந்து விடகூடாது என்பதில் தினகரன் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், ஒ.பி.எஸ்சை ஒரு குற்ற உணர்ச்சி குத்தி கிழிப்பதாகவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் எனவும், 2 மாதத்தில் தேர்தல் வராது எனவும் தெரிவித்தார்.
எம்.எல்.ஏக்கள் எண்ணத்தில் தினகரன் இருப்பதாகவும், 60 நாட்களில் கழகம் ஒன்றாக இணைந்து நிற்கும் எனவும் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.