
தற்போது 32 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தினகரனை சந்திப்பார்கள் என கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்கு செல்லும் முன்பு கட்சி நடவடிக்கைளில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் தினகரன் திஹார் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து தினகரன் அணி உருவானது.
இதைனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது வரை 32 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தொடர்ந்து அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும், தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என கூறினார்.
சசிகலா மற்றும் தினகரனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்தவித பாதிப்பும் வராது என தெரிவித்தார்.