பொதுச்செயலாளருக்கான போட்டியில் தற்போதைய பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் இருக்கிறார். கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் நெருக்கமாக இருந்தவர், கட்சியில் சீனியர் மற்றும் தற்போது ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்து வருவதால் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. துரைமுருகனைத் தவிர்த்து வேறு எவரை பொதுச்செயலளார் பொறுப்புக்கு கொண்டு வந்தாலும், அதில் பலத்த போட்டி இருக்கும். அதன்காரணமாக, துரைமுருகனே நியமிக்கப்படுவார் என திமுக முன்னணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளராக கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தும் கடந்த 7ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அன்பழகன் மறைவை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 1 வார காலம் ஒத்திவைக்கப்பட்டு கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நேற்று மாலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் படத்திறப்பு நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அன்பழகனுக்கு பிறகு திமுக பொதுச்செயலாளராக யார் வருவார் என்கிற கேள்வி திமுகவினரை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவில் தலைவர் பதவிக்கு இணையான அதிகாரங்களோடு அன்பழகன் 43 ஆண்டுகள் தொடர்ந்து போட்டியின்றி அப்பதவியில் இருந்து வந்தார்.
புதிய பொதுச்செயலாளர் தேர்வு..! திமுக பொதுக்குழு கூடுகிறது..!
தற்போது அவருக்கு பிறகு அந்த இடத்தை திமுகவில் பிடிக்கபோவது யார் என்பது பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. பொதுச்செயலாளருக்கான போட்டியில் தற்போதைய பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் இருக்கிறார். கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் நெருக்கமாக இருந்தவர், கட்சியில் சீனியர் மற்றும் தற்போது ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்து வருவதால் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. துரைமுருகனைத் தவிர்த்து வேறு எவரை பொதுச்செயலளார் பொறுப்புக்கு கொண்டு வந்தாலும், அதில் பலத்த போட்டி இருக்கும். அதன்காரணமாக, துரைமுருகனே நியமிக்கப்படுவார் என திமுக முன்னணியினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக துணைப்பொதுச்செயலாளர் திண்டுக்கல் பெரியசாமிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் அப்பதவியை குறிவைத்து காய்கள் நகர்த்தி வருகின்றனர். இவர்களில் எ.வ.வேலு நியமிக்கபட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. யார் என்ன பொறுப்பை ஏற்பார்கள் என்பதை ஸ்டாலின் ஏற்கனவே முடிவெடுத்து அதை கட்சி முன்னணியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் 29ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் அதற்கான அறிவிப்பு வெளியாகி சச்சரவின்றி பதவி ஏற்பு நடைபெற இருக்கிறது.