நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் பாஜக ஆட்சியை ஒழித்து விடும்..! துரைமுருகன் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Aug 20, 2023, 11:57 AM IST

கலைஞரின் வேகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அந்த அனுபவம் அமைச்சர் உதயநிதியிடம் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன் நீட்டை பொறுத்தவரை அவரால்தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கூறியுள்ளார். 
 


நீட் தேர்வு- மாணவர்கள் தற்கொலை

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மசோதா  நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், ஆளுநர் ரவி அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், வேறு வழி இல்லாமல் அந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது தந்தையும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்தது நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது.

Tap to resize

Latest Videos

திமுக உண்ணாவிரத போராட்டம்

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி திமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அந்த அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போரட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார். அப்போது இன்று திருமண செய்த ஜோடி ஒன்று தங்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களது கையில் நீட் வேண்டாம் என்ற வாசகத்தோடு பதாகையை கையில் ஏந்திருந்தனர்.

போராட்டத்தில் பேசிய அவர்,  நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மாணவர்கள் பலர் தங்களது உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே ஒரு அறப்போராட்டம் தான் உண்ணாவிரதப் போராட்டம்.

இந்தி எதிர்ப்புக்காக போராட்டம்

நீட் தேர்வு என்ற கொடிய சட்டத்தை மாணவர்கள் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளதாக விமர்சித்தார். ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு. இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வால் இழந்து உள்ளனர். இன்று நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு தி.மு.க.வில் பல பேர் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் விட்டனர். பல மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் இழந்துள்ளனர்.

அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களாகிய இளம் சிட்டுகள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் கவலைப்படவில்லை. வரலாற்றை பார்த்தால் இந்தியை திணித்த ஆட்சி ஒழிந்தது. அதை போல் நீட்டை எதிர்த்து பலர் விடுகிற சாபம் மத்தியில் உள்ள ஆட்சியை ஒழித்துவிடும் என தெரிவித்தார். 

நீட் தேர்வு- உதயநிதி ஒழிப்பார்

அமைச்சர் உதயநிதி நீட்டை ஒழித்துகட்டும் வரை இளைய சமுதாயம் ஓயாது என சபதம் எடுத்துள்ளார். அவர் தாத்தா கலைஞரை போல் வேகமாக செயல்படும் ஆற்றல் படைத்தவர். இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயா அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிந்தது அதற்கு காரணம் உதயநிதிதான் என சரித்திரத்தில் ஒருநாள் இடம்பெறும் என துரைமுருகன் உறுதி பட தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நீட் தேர்வு ரத்து ரகசியம் எனக்கு தெரியும் என உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா? வானதி

click me!