தமிழகத்தின் நீராதாரங்களை பாதிக்கும் எதையும் திமுக அனுமதிக்காது… துரைமுருகன் திட்டவட்டம்!!

By Narendran SFirst Published Nov 16, 2021, 6:13 PM IST
Highlights

தமிழ்நாட்டின் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் கர்நாடகத்தில் எந்த புதிய அணையையும் கட்ட திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினாலும் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அந்த உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 119 அடி நிரம்பியிருந்த நிலையில், மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41வது ஆண்டாக அதன் முழு கொள்ளளவைக் கடந்த 14ஆம் தேதி எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34,000 கனஅடியிலிருந்து 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தற்போது அணையிலிருந்து நீர் திறப்பு 300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மேலும் அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணையின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அணையின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், மேட்டூர் திப்பம்பட்டியில் நடைபெற்று வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை பார்வையிட்டதுடன், திப்பம்பட்டியில் இருந்து மேட்டூர் உபரிநீரை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அரைகுறையாக விடப்பட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே செல்கிறது என்றும் கூறினார்.

மேலும் உபரிநீர் திட்டத்தை திமுக ஆட்சிதான் முழுமையாக நிறைவேற்றும் என்று கூறிய அவர், நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் கேரள, கர்நாடகத்தில் தமிழ்நாட்டின் நீராதாரங்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய அணையையும் கட்ட திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தர்மபுரி சென்று ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நிலவரம் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வுசெய்தார். அங்கு பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரியாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பான முயற்சி நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாகவும் தடைகளைக் களைந்து  ராசிமணல் பகுதியில், காவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

click me!