இது தெரியாமல் நடக்க வாய்பே இல்லை.. திட்டமிட்டு வன்னியர்களை அசிங்கப் படுத்திடாங்க.. கொதிக்கும் பாமக பாலு.!

By vinoth kumarFirst Published Nov 16, 2021, 5:50 PM IST
Highlights

ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள வழக்கறிஞர் நோட்டீஸுக்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படம் தொடர்பாக கேட்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை இந்த விவகாரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதி மற்றும் அவரது வாரிசுகள் பயன்பெறும் வகையில் வழங்கப்படும். 

ஜெய் பீம் பட விவகாரத்தில் அனுப்பட்ட நோட்டீஸ்க்கு இயக்குநர் மற்றும் சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். 

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் நவம்பர் 2ம் தேதி வெளியானது. இந்த படம் பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்றை பெற்றிருந்தாலும், மற்றொரு புறம் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், அந்தோணிசாமியின் பெயரை குருமூர்த்தி என மாற்றியிருப்பதும், உதவி ஆய்வாளரின் பின்னணியில் எங்களது சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை காட்டியிருப்பதும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து, அந்த காட்சிகள் மாற்றப்பட்டது. 

அப்படி இருந்த போதிலும் நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது.  இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், ஜெய் பீம் படக்குழுவின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாகக் கூறி, அக்னி குண்டம் காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. உள்நோக்கத்துடன் படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சிகளை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ள நிலையில் எங்களது வன்னியர் சங்கத்துக்கும், வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குருவின் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே, இதற்காக ‘ஜெய் பீம்’படக்குழு 24 மணி நேரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன், 7 நாட்களில் ரூ.5 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், அக்னி குண்டம் தொடர்பான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘ஜெய் பீம்’ படக்குழு மற்றும் அதன் தயாரிப்பாளர், இயக்குநருக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கும், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கும் தொடரப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள வழக்கறிஞர் நோட்டீஸுக்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படம் தொடர்பாக கேட்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை இந்த விவகாரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட பார்வதி மற்றும் அவரது வாரிசுகள் பயன்பெறும் வகையில் வழங்கப்படும். 

வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியது தனிநபரின் செயல் அல்ல. இது தெரியாமல் செய்யப்பட்ட ஒன்று அல்ல. திட்டமிட்டு வன்னியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும்படி எடுக்கப்பட்டு ஒன்று என தெரிவித்தார்.

click me!