பாமக சங்பரிவார் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு.

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2021, 5:59 PM IST
Highlights

அதில் கலை இயக்குனர் என்று ஒருவர் இருக்கிறார், அவர்கள்தான் அந்த கதைக்களத்தின் சூழலுக்கு ஏற்ப பின்னணி காட்சிகளை உருவாக்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அந்த படத்தில் அப்படி ஒரு காட்சி இருப்பதே யாருக்கும் தெரியவில்லை, 

பாமக மெல்லமெல்ல சங்பரிவார் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும், அது அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு தெரியுமா தெரியாதா என்பதே தன் கேள்வி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். அடிப்பேன் உதைப்பேன் என்ற உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நடிகர் சூர்யா அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம், இந்தப் படம் பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகார வெறிக்கு அம்மாக்கள் இரையாவதை ஒரு உண்மை சம்பவத்துடன் தொடர்பு படுத்தி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது ஜெய்பீம், அதே நேரத்தில் இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு  வைத்துள்ளதாக கூறி பாமகவினர் சர்ச்சை எழுப்பியுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமாக அக்னிசட்டி காட்டியிருப்பதும் திட்டமிட்டே வன்னியர்களை இழிவுபடுத்தும் செயல் எனகூறி சூர்யாவுக்கு எதிராக பாமக உள்ளிட்ட வன்னிய ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. 

வன்னிய மக்களிடம் பகிரங்கமாக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், அத்துடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கத்தின் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இயக்குனர் ஞானவேல் மற்றும் ஓடிடி தளமான அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் அன்புமணி எழுதிய கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில், 

நடிகர் சூர்யா அவர்கள் மிகவும் நிதானத்துடன், பொறுப்புடனும் இருந்து வருவதைப் பார்க்கும்போது அவர்  நன்கு முதிர்ச்சி அடைந்தவராக, பக்குவமடைந்தவராக தென்படுகிறார். அவருடைய அணுகுமுறைகளில் ஒரு சார்பு நிலை உள்ளது. எந்த ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ, மத த்திற்கு ஆதாரவாகவோ, சாதிக்க ஆதரவாகவோ அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாக நான் பார்க்கவில்லை. சூர்யாவின் அணுகுமுறை என்பது எல்லா சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய அனுகுமுறையாக உள்ளது. அவர்கள் எழுப்பிய கேள்விக்குகூட அவர் விடையளிக்க வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்வு அவரிடம் இருந்ததை பார்க்கும் போதே அவர் எந்தளவுக்கு பக்குவமானவர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அவர் அஞ்சக் கூடியவர் அல்ல. இந்த திரைப்படம் என்பது முழுக்க முழுக்க ஒரு உண்மை கதையை மையப்படுத்தி புனைந்து எடுக்கப்பட்டது. இதற்கு நடிகர், இயக்குனருக்கு மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

அதில் கலை இயக்குனர் என்று ஒருவர் இருக்கிறார், அவர்கள்தான் அந்த கதைக்களத்தின் சூழலுக்கு ஏற்ப பின்னணி காட்சிகளை உருவாக்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அந்த படத்தில் அப்படி ஒரு காட்சி இருப்பதே யாருக்கும் தெரியவில்லை, உள்நோக்கம் இருக்கும் என்றால் அதை அவர்கள் ஜூம் செய்து அல்லது குளோசப் ஷாட்டில் காட்டி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. எனவே அந்த காட்சி உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என கூற முடியாது. அப்படிப்பட்ட நபர் சூரிய அல்ல. அதேபோல் ஒரு பொறுப்புமிக்க கலைஞரை தாக்குவோம், அடிப்போம் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது பாமக சங்பரிவார் கும்பலின் கூடாரமாக மாறிக்கொண்டு இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ராமதாசுக்கு தெரியுமா தெரியாதா என்பதுதான் என் கேள்வி. சர்பரிவார் கும்பல்கள்தான் இப்படி செய்வார்கள், சங்பரிவார் கும்பல் பாமகவில் ஊடுறுவியிருக்கிறார்கள், இது அவரது அடி மடியில் கை வைக்கும் வேலை. 

பாஜகவுடன் யாரெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மெல்லமெல்ல  சங்பரிவாரக் கும்பல்களைப் போலவே மாறிக் கொண்டிருக்கிறார்கள். பாமக பாஜகவும், அதன் கிளை அமைப்பாகவும் மாறிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் சூரிய அடி பணிய மாட்டார் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!