உரிய நேரத்தில் தேவையான நிவாரணத் தொகையை வழங்காமல் இருந்தால் மக்களுக்கு தமிழக அரசு மீது அதிருப்தி ஏற்படும் என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு நிவாரண நிதியை வழங்காமல் தாமதிப்பதாக துரைவைகோ குற்றம் சாட்டி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, நெல்லை மாவட்டத்தில் மதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
கடந்த ஆறு நாட்களாக மதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளும் வெள்ளத்தால் மிகவும் சேதம் அடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். ஆறு நாட்களாக தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளை அனுப்பி வைத்து தீவிரமாக பணி மேற்கொண்டு வருகிறது.
தென் மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல் மத்திய அரசு அதனை செய்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் 1200 கோடி பேரிடர் நிதியாக ஒதுக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பை சீர் செய்யவே பல்லாயிரம் கோடி தேவைப்படுகிறது. மத்திய அரசு தற்போது வழங்கும் நிதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கில் தான் கூடுதல் கேட்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் பேசுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மத்திய அரசு தற்போது ஒதுக்கிய நிதியை வைத்து மிக்ஜாம் சேதத்தைக் கூட சரி செய்ய முடியாது. மிக்ஜாம் புயல் சீரமைப்பு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் 19000 கோடி கேட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் பல்லாயிரம் கோடி நிவாரணம் வழங்க தேவைப்படுகிறது. மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபமடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இதுபோன்று செயல்படுகிறது.
தமிழக மக்கள் திராவிடத்தின் பின்னால் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிகிறது. மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசியல் ஒரு சாக்கடை என்பதை போல் பாஜகவினர் செயல்படுகின்றனர். தயாநிதி மாறன் பேசிய பேச்சில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை நான் பேச்சாக பலமுறை பல கூட்டங்களில் பேசி உள்ளனர். பாஜகவினர் மழை வெள்ள பாதிப்பை வைத்து கேவலமான அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.