#BREAKINGகட்டுக்கடங்காத கொரோனா... நாளை அவசரமாக கூடுகிறது தமிழக அமைச்சரவை... முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

By Kanimozhi PannerselvamFirst Published May 8, 2021, 3:11 PM IST
Highlights

இந்நிலையில் நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றி திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரியணை ஏறியுள்ள இதே சமயத்தில், அவர்களுக்கு கொரோனா 2வது அலை மிகப்பெரிய சவலாக மாறியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

ஆனால் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தினார். அதில் கொரோனா நெருக்கடி காலத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்கப்படும்,  தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் ஆகிய அறிவிப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பதவியேற்ற முதல் நாளே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

அதனைத்தொடர்ந்து மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. காய்கறி, மளிகை கடைகள், பால் கடைகள் ஆகியன மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இப்படி முதல் நாளில் இருந்தே கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும், பிற பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!