அதிமுகவையே சபாஷ் போட வைத்த முதல்வர் ஸ்டாலின்.. ஓபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 3:04 PM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசித்திர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு இருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதையும் வரவேற்கிறேன்.

பாதுகாப்பாக இருப்போம் தொற்று பரவலை தடுப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசித்தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு இருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதையும் வரவேற்கிறேன். மே 10ஆம் தேதி முதல்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதல் தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், ஏழை எளிய பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்திட வேண்டும், மேலும் மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையும், அதில் தற்காலிக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும். நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும்  ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். கொரோனா எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களையும், அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!