
திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குல கல்வியை கொண்டு வரவும், வட மாநிலத்தை போன்று தமிழகத்திலும் மத கலவரத்தை ஏற்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அவர்களது முகமூடியை கிழிக்க வேண்டும். நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் படிப்பதற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. டாக்டர் படிப்புக்கும், சமஸ்கிருதம் தெரிந்து இருப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று தந்தை பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் குல கல்வியையும் எதிர்த்தார். அதன்பிறகு அது ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவரவர் மாநில கல்வி உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பா.ஜ.க கூறி வருகிறது. அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? வட மாநிலங்களில் மதவெறி தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கு மதவெறியை உருவாக்க நினைக்கும் நபர்களின் முகமூடி திரையை அகற்ற வேண்டும். தமிழகத்தை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது. தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ந்து தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதி, சமத்துவம் என்று திராவிடர் மாடல் ஆட்சி செய்து வருகிறார். ஒரு நரிக்குறவர் வீட்டிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அவர்களது வீட்டில் உணவு அருந்தியுள்ளார்.
சமத்துவம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அதை செய்து காண்பித்தவர் முதல்வர் மு.க ஸ்டாலின். அதை பார்த்து சிலருக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திராவிட கட்சிகளை எதிர்க்கும் முன்பு அவர்களது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நமது மொழி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. இந்தியை திணிக்கும் முயற்சியை எதிர்க்கும் போராட்டம் மொழி உரிமைக்கான போராக மாற வேண்டும்’ என்று பேசினார்.