உங்க சண்டையில் திமுகவை இழுப்பதா.? அதிமுக அலுவலகம் யாருக்கென நீதிமன்றத்தில் நிரூபியுங்க.. ஆர்.எஸ்.பாரதி கடுகடு!

By Asianet TamilFirst Published Jul 11, 2022, 8:52 PM IST
Highlights

அதிமுகவில் நடக்கும் சண்டைக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள். இந்தக் களேபரம் நடைபெற்ற பிறகு ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் அதிமுகவை ஆட்ட முடியாது அசைக்கவும் முடியாது.. மார்தட்டும் எடப்பாடி பழனிச்சாமி.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க. ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “அதிமுகவில் நடக்கும் சண்டைக்கு திமுகதான் காரணம்” என்று தன் பங்குக்கு திமுகவை குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் திமுகவை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கும் நிலையில், இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை எப்படி கூட்டினார் என்பது எல்லோருக்குமே தெரியும். பொதுக்குழுவுக்காக எடப்பாடி பழனிச்சாமி நிறைய பணம் செலவழித்திருக்கிறார். அதிமுகவில் நடக்கும் சண்டைக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

எதற்கெடுத்தாலும் திமுகவையும் தமிழக முதல்வரையும் தாக்கி பேசுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கமாக ஆகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை வரும்போது அரசு செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று உள்ளது. அதைத்தான் திமுக  அரசு செய்திருக்கிறது. நீதிமன்றத்துக்கு சென்று அதிமுக அலுவலகம் யாருக்கு என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். அதிமுக என்பது உடைந்த கண்ணாடி. அதை ஒட்ட வைக்க முடியாது. அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுந்திருந்துப் பாருங்கள்” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வானதன் எதிரொலி... அடித்து நொறுக்கப்படும் ஓபிஎஸ் உருவப்படங்கள்!!

click me!