பாஜகவுக்கு ஒரு வார்டுக்கூட கிடையாது.. எல்லா வார்டும் அதிமுகவுக்குதான்.. நெல்லையில் பாஜகவை பதற செய்யும் அதிமுக!

By Asianet TamilFirst Published Jan 25, 2022, 10:20 PM IST
Highlights

”இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை அது சிங்கம் போன்றது. திமுகவின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் அனைத்து வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட்டால்தான் முடியும்."

பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  பாஜகவோடு நெருங்கிய அதிமுக, அன்று முதல் அக்கட்சியுடன் கூட்டணியையும் தொடர்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2021-இல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. இந்த எல்லாத் தேர்தல்களிலும் அதிமுக - பாஜக கூட்டணி திமுக கூட்டணியிடம் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக தோல்விக்கு பாஜகத்தான் காரணம் என்று சில அதிமுக நிர்வாகிகள் பேசினாலும். பாஜகவோடு கூட்டணியை எந்த சச்சரவும் இல்லாமல் தொடர்கிறது அதிமுக தலைமை. இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது.

தேர்தலுக்காக அதிமுக - பாஜக இடையே உள்ளூர் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் போட்டியிடுவது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் அதிரடியாக அறிவிப்பி ஒன்றை அறிவித்திருக்கிறார். தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், திசையன்விளையில் எல்லா வார்டுகளிலும் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் பேசியது இதுதான்.”இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை அது சிங்கம் போன்றது. திமுகவின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் அனைத்து வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட்டால்தான் முடியும். திசையன்விளை பேரூராட்சியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கத் தேவையில்லை.” என்று ஏ.கே. சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜக துணைத் தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரனின் சொந்த ஊர் திருநெல்வேலிதான். அந்த ஊரிலிருந்தே பாஜக கூட்டணி தேவையில்லை என்ற கருத்து அதிமுகவினரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. இதனால், பாஜக - அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

click me!