கலைஞருக்கு அப்துல் கலாமை பிடிக்கவே பிடிக்காது! உண்மையை போட்டு உடைத்த பர்சனல் டாக்டர்!

Published : Sep 27, 2018, 09:44 AM IST
கலைஞருக்கு அப்துல் கலாமை பிடிக்கவே பிடிக்காது! உண்மையை போட்டு உடைத்த பர்சனல் டாக்டர்!

சுருக்கம்

தி.மு.க தலைவராக இருந்த கலைஞருக்கு குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை பிடிக்கவே பிடிக்காது என்கிற உண்மையை பிரபல மருத்துவர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

கடந்த 2002 முதல் 2007 வரை இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர் அப்துல் கலாம். தமிழகத்தை சேர்ந்தவரான அப்துல் கலாம் இந்திய அளவில் உயர் பதவியில் இருந்தது தமிழர்களான அனைவருக்கும் பெருமை சேர்த்த ஒன்று. ஆனால் தி.மு.க தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதிக்கு மட்டும் அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானதில் உடன்பாடு இல்லை என்று அப்போது முதலே ஒரு பேச்சு உண்டு.
  
 2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க அப்துல் கலாமை நிறுத்தியது. பா.ஜ.கவின் இந்த முடிவால் அப்போது கூட்டணியில் இருந்த கலைஞர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் கலைஞரை சமாதானம் செய்து தேர்தலில் கலாமுக்கு ஆதரவாக தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். கலாமும் கூட தனக்கு அதரவு தருமாறு கலைஞரிடம் கேட்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.


   
இருந்தாலும் கூட குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம் வெற்றி பெற்றார். பின்னர் கலாம் – கருணாநிதி இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஆனாலும் இருவருக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்றே பேசப்பட்டது. இந்த நிலையில் தான் 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின் போது மீண்டும் கலாமை குடியரசுத் தலைவராக்க மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டார்.
   
மம்தாவின் முயற்சிக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை குடியரசுத்தலைவராக்க திட்டமிட்டிருந்தது. இந்த சமயத்தில் கருணாநிதியிடம் சென்று குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை நிறுத்த முயற்சிகள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கலாம் என்றால் கலகம் என்று ஒரு பொருள் உண்டு என்று கலைஞர் கூறிய பதில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
   
இதன் மூலம் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதை கலைஞர் விரும்பவில்லை என்று பேசப்பட்டது. பின்னர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆனது தனிக்கதை. ஆனாலும் கூட கருணாநிதி – கலாம் இடையிலான பிரச்சனை என்னவென்று யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. கலாமுக்கும் – கருணாநிதிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூட தி.மு.க அவ்வப்போது விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தது.


   
இந்த நிலையில் சென்னையில் நேற்று சமூக மருத்துவர்கள் சார்பில் கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதிக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தவரும், சில காலம் கலைஞரின் பர்சனல் டாக்டராகவும் இருந்த மயில்வாகனன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கருணாநிதியால் நியமிக்கப்பட்டேன்.   
   
இதனை தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்திருந்தேன்.  அந்த விழாவுக்கான அழைப்பிதழை கொடுக்க கோபாலபுரம் சென்று இருந்தேன். அழைப்பிதழை முதலில் வாங்கிப் பார்த்த கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன், ஏன் கலாமை நிகழ்சிக்கு அழைத்தீர்கள் என்று என்னிடம் கேட்டார். மேலும் கலாமை கலைஞருக்கு பிடிக்காது என்றும் சண்முகநாதன் கூறினார்.
   
இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து நின்று கொண்டிருந்தேன். ஆனால் கலைஞரோ இது வேறு விவகாரம். தாராளமாக கலாமை அழைத்து மயில்வாகனன் பட்டம் அளிப்பு விழாவை நடத்திக் கொள்ளட்டும் என்று கூறினார். இந்த அளவிற்கு கலைஞர் பெருந்தன்மை கொண்டவர் என்றும் கூறி பேச்சை முடித்தார் மயில்வாகனன்.  இதன் மூலம் கலைஞருக்கும் கலாமுக்கும் ஏதோ ஒரு மனஸ்தாபம் இருப்பதும், கலாமை கலைஞருக்கு பிடிக்காது என்பதும் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!