
திமுக அரசு சொத்து வரியை ஏன் உயர்த்தியது என்பது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
மோடி அரசின் திட்டம்
சென்னை தியாகராய நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயத் துறையில் வேளாண் பெருமக்களுக்காக நம்முடைய பாரத பிரதமர் மோடி செய்திருக்கிற திட்டங்களைப் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் நான் விளக்கம் அளிக்க இருக்கிறேன். மத்திய அரசின் விவசாய காப்பீடு திட்டத்தின்படி, இன்று இந்தியா முழுவதும் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற்று இருக்கிறார்கள். இதில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விவசாய காப்பீடு ரூ. 7846 கோடி வழங்கபட்டு இருக்கிறது.
சொத்து வரி உயர்வு ஏன்?
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் பேசும்போது பாஜக அதிகார வெறியுடன் செயல்படுகிறது என்று குறை கூறி பேசினார். மத்திய அரசைப் பார்த்து நீங்கள் குறை சொல்லும் போது உங்கள் முதுகில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி தேர்தல் முடியும் வரை காத்திருந்து சொத்து வரியை உயர்த்தி இருக்கிறீர்கள். எதற்கு சொத்துவரியை உயர்த்தினீர்கள்? நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ரூபாய் 15,000 கோடி செலவு செய்து இருக்கிறார்கள். அதையெல்லாம் திரும்பப் பெற வேண்டும். அதற்காகத்தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள்.
வலுப்படுத்த முனைப்பு
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம். குறிப்பாக தமிழக கிராமபுற அளவில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவதற்கு நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம். திமுக அரசு மீது தமிழக ஆளுநரிடம் நாங்கள் புகார் அளித்தோம். நாங்கள் ஆளுநரைச் சந்தித்து புகார் அளித்த பிறகுதான் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்த தவறுக்காக அவரை வேறு துறைக்கு மாற்றினார்கள்.” என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி இந்தியா முழுவதும் திராவிட மாடல்.. ஆதிக்க வெறி பொய் மூட்டைகளை எங்களிடம் உருட்ட வேண்டாம்.. ஸ்டாலின் விளாசல்!